×

ஊரடங்கில் உருவானது ‘புது டிரெண்ட்’ செல்லப்பிராணிகளை தத்தெடுத்தால் மன அழுத்தம் பறந்து போகும்...

சென்னை: ஜிம்மி... எங்கிருந்து அழைத்தாலும் நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்து, கால் முகர்ந்து, வாஞ்சையோடு முகம் பார்க்கும் செல்லப்பிராணி. ஜிம்மி மட்டுமல்ல… எல்லா செல்லப்பிராணிகளின் பிறவிக்குணம் அது. எஜமானர் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடனே, துள்ளிக்குதித்து வரவேற்கும். இதைப் பார்த்ததும் அந்த எஜமானுக்கும் இருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவரது மனச்சோர்வு, அலைச்சல், களைப்பு, மனதை குழப்பிய பிரச்னைகள் என அனைத்துமே அந்த நொடியில் காணாமல் போய்விடும். இப்படி ஒரு நிம்மதியை தான் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பலரும் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

ஊரடங்கால் வீட்டுக்குள் இருப்பவர்களும், வீட்டிலிருந்தே ஆபீஸ் வேலை பார்ப்போர் பலருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மன அழுத்தத்தை போக்க, செல்லப்பிராணிகள் இல்லாதவர்கள் கூட ஆன்லைன் மூலம் அவற்றை தத்தெடுக்க தொடங்கியுள்ளனர். இப்படி ஒரு ட்ரெண்ட் இந்தியாவின் பல மாநிலங்களில் உருவாகியுள்ளது.  உதாரணமாக, டெல்லியை சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஒருவர், டெல்லிக்கு புறநகரில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் உயர் ரக நாய் ஒன்றை தத்தெடுத்துள்ளார். வேலைகளை எல்லாம் முடித்த பிறகு, தினமும் வீடியோ கால் மூலம் அந்த நாயுடன் கொஞ்சி விளையாடி மகிழ்கிறார்.

இதனால் மன அழுத்தம் அபாரமாக குறைந்து விடுகிறதாம். பல்வேறு நாய் இனங்களை தன் பண்ணையில் வைத்து வளர்த்து வரும் ஒருவர் இது குறித்து கூறுகையில், “ஊரடங்கால் பலரையும் தனிமை வாட்டி வதைத்து வருகிறது. இவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட தத்தெடுப்பது சிறந்த வழியாக உள்ளது. தன்னார்வ அமைப்புகள் பல செல்லப்பிராணிகள் வளர்ப்பு மையங்களை வைத்துள்ளன. இங்கு தங்களுக்குப் பிடித்தமான ஒன்றை ஆன்லைனிலேயே தேர்வு செய்யலாம். அந்த அந்தப் பிராணியை பராமரிப்பதற்கான செலவை அவர் ஏற்க வேண்டும் அவ்வளவுதான். பின்னர் அந்த நபர் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பிராணியுடன் வீடியோ காலில் கொஞ்சி மகிழலாம்.” என்றார்.

பீப்பிள் பார் அனிமல்ஸ் என்ற அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,  “ஒரு செல்லப்பிராணியை பராமரிக்க மாதம் சராசரியாக ₹3,000 ஆகும். இந்த செலவை தத்தெடுப்பவர் தரவேண்டும். ஆனால் இதுகுறிப்பிட்ட கால அளவோடு முடிந்துவிடுவதில்லை. நீண்ட காலத்துக்கு இந்தப் பராமரிப்பு செலவை அவர் ஏற்க வேண்டிவரும். இதை தத்தெடுக்கும் முன்பே தெளிவாக சொல்லி விடுகிறோம்” என்றார். “செல்லப் பிராணிகளுடன் இவ்வாறு நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை கண்டிப்பாக குறைக்கும்” என மனநல மற்றும் நடத்தை அறிவியல் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கள்ளம் கபடம் இல்லாத செல்லப் பிராணிகளுடன் பழகுவது மட்டுமல்ல…. பிராணிகளை தத்தெடுக்கும் ஆரோக்கியமான ட்ரெண்ட் மிகுந்த மன ஆறுதலைத் தருகிறது  என்கின்றனர் விலங்கின ஆர்வலர்கள்.

இப்படியும் வழியிருக்கு...
வருமானமின்றி வீட்டுக்குள் அடைந்து கிடப்பவர்களுக்கு விலங்குகளை தத்தெடுப்பது சாத்தியமானதல்ல. ஆனால் அவர்கள்  மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் தங்களுக்கு பிடித்தமான பறவைகள், காட்டுயிர்களை பார்த்து மகிழலாம். இது இயற்கையோடு இணைந்து வாழும் உந்து சக்தியை மனிதர்களுக்குள் உருவாக்கும் என பறவைகள் மற்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பரிவு காட்டலாம், ஆனால்...
2012ல் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, நாடு முழுவதும் 1.7 கோடி தெரு நாய்கள் உள்ளன. ஊரடங்கால் ஏராளமான தெருநாய்கள் உணவின்றி அலைந்து திரிகின்றன. இதுபோல் கோயில்கள் மூடப்பட்டதால் அங்குள்ள பல குரங்குகளும் நகருக்குள் புகுந்து விட்டன. பரிதாபப்பட்டு பலர் அவற்றுக்கு உணவளித்து வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் சிலர் தெரு நாய்களை வீட்டுக்கே கொண்டுவந்து வளர்க்கத் தொடங்கியுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகின்றன. இதுபோல் ஹாங்காங்கில் மக்கள் வழங்கிய உணவை சாப்பிட்ட தெருநாய்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே பரிவு காட்டும் மக்கள் விலங்குகளுக்கு தொற்று பரவாமலும், அவற்றிடமிருந்து  நமக்கு சில கிருமிகள் பரவி நுரையீரல் சுவாச பிரச்சனைகள் ஏற்படாதவாறு பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.  மேலும், கோயில்களில் உணவு கிடைக்காமல் வெளியே வரும் குரங்குகள், தங்கள் வாழ்விடங்களான காடுகளை நோக்கி இடம்பெயர ஆயத்தமாகின்றன.. அவற்றுக்கு உணவளித்து இந்த இடப்பெயர்ச்சியை தடுக்க வேண்டாம் என காட்டுயிர் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உயிரியல் பூங்காவையும் அரவணைக்கலாம்
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா,  கிண்டி சிறுவர் பூங்கா, முதலை பண்ணை, கர்நாடகாவில் உள்ள பன்னேருகட்டா தேசியப் பூங்கா, செம்ம ராஜேந்திர பூங்கா, கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் உயிரியல் பூங்கா, ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்கா, பஞ்சாபில் உள்ள மகேந்திர சவுத்ரி உயிரியல் பூங்கா,  திரிபுராவில் உள்ள சிபாகிஜாலா காட்டுயிர் காப்பகம் உட்பட நாட்டின் பிரபல உயிரியல் பூங்காக்களில் வனவிலங்குகளை பலர் தத்தெடுத்து வருகின்றனர்.

உயிரியல் பூங்காவில் வனவிலங்குகளை தங்கள் வசதிக்கேற்ப ஒரு நாள் முதல் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பராமரிப்புச் செலவை வழங்கி தத்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், செல்லப் பிராணிகளுக்கு ஏற்பாடு செய்தது போல, உயிரியல் பூங்காவில் விலங்குகள் பராமரிப்பது அவற்றின் செயல்பாடுகளை நேரில் காண ஏற்பாடு செய்தால் அவற்றை ஏராளமானவர்கள் தத்தெடுப்பு செய்வதற்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும்.

Tags : Curfew, New Trend, Pet, Depression
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...