×

புதிய சர்ச்சையில் சிக்கினார் கருணா; புலிகள் இயக்கத்தில் இருந்தபோது 2000 ராணுவத்தினரை கொன்றேன்: இலங்கை அரசு அதிர்ச்சி, அதிரடி

கொழும்பு: ‘ஈழப்போரில் 2000 முதல் 3000 ராணுவ வீரர்களை கொன்றேன்,’ என விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கருணா அம்மான் பேசியது குறித்து உடனடியாக விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரசாரங்கள் நடந்து வருகின்றன. அம்பாறையில் சமீபத்தில் நடந்த பிரசாரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரும், அகில இலங்கை திராவுத மகா சபை கட்சி தலைவருமான கருணா அம்மான் பேசுகையில், ‘‘விடுதலைப் புலிகள் அமைப்பில் நான் இருந்த போது, ஆனையிறவில் 2,000 முதல் 3,000 இலங்கை ராணுவ வீரர்களை கொன்றேன். கிளிநொச்சியிலும் அதிகம் பேரை கொன்றேன்.

இலங்கையில் கொரோனா வைரஸ் கொன்றதை விட அதிகம் பேரை நான் அதிகமாக கொன்றுள்ளேன்,’’ என்றார். இது கடும் சர்ச்சையாகி இருக்கிறது. ‘கருணா அம்மான் கொரோனா வைரசை விட ஆபத்தானவர்’ என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. கருணா பேசியது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் தலைவர் சந்தனா விக்ரமசிங்கே குற்றவியல் புலனாய்வு துறை விசாரித்து அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் இலங்கை அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் துணைத் தலைவராக இருந்தவர் கருணா. ஆனால், கடந்த 2004ம் ஆண்டில் அவர் அமைப்பிலிருந்து வெளியேறினார். அதன்பின் 2009ல் இறுதிகட்ட போரில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. இந்த அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா, அப்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சேக்கு நெருக்கமானார். அதன் பலனாக, 2010ல் நாடாளுமன்ற எம்பி.யான அவர், துணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியில் இருந்து நீக்கம்
கருணாவின் அகில இலங்கை திராவுத மகா சபை கட்சி, முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் எஸ்எல்பிபி கட்சியின் தோழமை கட்சியாக கருதப்பட்டு வந்தது. தற்போது, 2000 ராணுவ வீரர்களை கொன்றதாக அவர் பேசியதால், அவரது கட்சி தங்களின் தோழமை கட்சியல்ல என எஸ்எல்பிபி அறிவித்துள்ளது.

Tags : LTTE ,soldiers ,government ,Karuna ,Sri Lankan , Karuna, Government of Sri Lanka
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....