×

நெல்லையில் 9 மணி நேரம் பரபரப்பு; கொரோனாவுக்கு பலியானவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் முதல் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிப்பு 600ஐ தாண்டியுள்ளது. நெல்லை அருகே கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 61 வயது தொழிலதிபர் வாடகை லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வந்தார். லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், கடந்த 17ம் தேதி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை அவர் இறந்தார்.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்திருந்த நிலையில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்ந்தது. இதையடுத்து அவரது உடலை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய விதிமுறைகளின் அடிப்படையில் கவச உடை அணிவிக்கப்பட்டு, அடக்கத்திற்காக தயார் செய்யப்பட்டது. கருப்பந்துறை இடுகாட்டில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நேற்று காலை 9 மணிக்கு ஜேசிபி வரவழைக்குப்பட்டு 12 அடி ஆழத்தில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் குழிதோண்டும் பணிகள் தொடங்கியவுடன் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகள் அவர்களை சமரசப்படுத்தினர். ஆனால் மக்கள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் குழி தோண்டும் பணியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் நெல்லை தாசில்தார் பகவதி பெருமாள் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, 9 மணி நேர தாமதத்துக்கு பின் மாலை 6 மணிக்கு மேல் அவரது உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டு நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.



Tags : Coroner victim , Paddy, Corona, Resistance
× RELATED புதுச்சேரி அரசு மருத்துவமனையில்...