×

மருத்துவத்துறைகளில் உள்ள லாபியால் இயற்கை மருத்துவ முறை அழிந்து விடுமோ என அச்சம் ஏற்படுகிறது

* கொரோனாவுக்கு புதிய மருந்து பரிசோதிப்பதில் என்ன தயக்கம்?
* மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: கொரோனாவுக்கான புதிய மருந்துகளை பரிசோதிப்பதில் என்ன தயக்கம் என கேள்வி எழுப்பிய ஐகோர்ட் கிளை, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த மருத்துவ பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இருவேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடலாம். இந்த மருந்தால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை.

இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமமான அளவில் வைத்திருக்கும். இன்னும் பல நோய்களை கட்டுப்படுத்தக்கூடியது. சீனாவில் ெகாரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே உதவியது. ‘இம்ப்ரோ’ மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தக்கூடிய சித்த மருந்தான ‘இம்ப்ரோ’வை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், ‘‘கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக்ெகாண்டே போகிறது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என மக்கள் அலைகின்றனர். அப்படி இருக்கும்போது, சித்த மருத்துவர் கண்டுபிடித்த ஒரு மருந்தை பரிசோதிக்காதது ஏன்? இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’’ என கேள்வி எழுப்பினர். அரசுத்தரப்பில், ‘‘பரிசோதனை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘ஏப்ரல் மாதமே சித்த மருத்துவர் அனுப்பியுள்ளார். ஏன், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் போன்றவை எந்த பரிசோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. கொரோனாவுக்காக அங்கீகரிக்கப்பட்ட சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களின் கண்டுபிடிப்புகளை பரிசோதிப்பதில் என்ன தயக்கம்? ஒருபுறம் சித்த மருந்தை பயன்படுத்துவது, மறுபுறம் புதிய கண்டுபிடிப்புகளை பரிசோதிப்பதில் தயக்கம் ஏன்? இரட்டை வேடம், மருத்துவத்துறைகளில் உள்ள லாபியால் இயற்கை மருத்துவமுறை அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது’’ என்றனர்.
பின்னர் நீதிபதிகள், ‘‘கொரோனாவிற்காக கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23க்கு (இன்று) தள்ளிவைத்தனர்.

Tags : lobby , Department of Medicine, Lobby, Natural Medicine
× RELATED ராகுல்காந்தி மீதுள்ள அச்சம்...