×

5 நாட்களில் 4வது முறை மிசோரமில் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்தன

அய்சால்: மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள், சாலைகள் போன்றவை சேதமாகி உள்ளன. மிசோரம் மாநிலத்தில் கடந்த 18ம் தேதி முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் மாலையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உணரப்பட்டது. இந்நிலையி்ல், நேற்று அதிகாலை 4.10 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. தலைநகரமான அய்சால் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதனால், தூக்கத்தில் இருந்த மக்கள் அலறி அடித்து எழுந்து, சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சம்பாய் மாவட்டத்தில் உள்ள சோகாதாரை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இந்த மாவட்டத்தின் பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் சேதமாகி உள்ளன. பல இடங்களில் சாலைகளில் விரிசல்கள், பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்துள்ளது. மிசோரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, இம்மாநில முதல்வர் சோரம்தங்காவிடம் தொலைபேசி மூலமாக பிரதமர் மோடி பேசினார்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மிசோரம் முதல்வரிடம் நிலநடுக்க சேத விவரங்களை கேட்டறிந்தார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சூழலை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : Earthquake ,Mizoram ,Houses , Mizoram, earthquake and houses collapsed
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்