×

எல்லையில் மோதலால் ஆத்திரம்; சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ5,000 கோடி ஒப்பந்தம் முடக்கம்: மகாராஷ்டிரா அரசு அதிரடி

மும்பை: இந்திய - சீன எல்லையில் இருநாட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டநிலையில், சீன நிறுவனங்கள் உடனான ரூ5000 கோடி ஒப்பந்தத்தை மகாராஷ்டிரா அரசு முடக்கியுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால், சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தகளை ரத்து செய்யும்படியும், சீன பொருட்களை புறக்கணிக்கும்படியும் நாட்டில் போராட்டம்  வெடித்துள்ளது. மேலும், மத்திய அரசும் பல்வேறு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது.  

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சீர்செய்யும் வகையில், மகாராஷ்டிரா அரசு ‘மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிங்கப்பூர்,  அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு  பல்வேறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த திங்களன்று புனே அருகே தாலேகான் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனத்தை அமைப்பதற்காக சீனாவின், ‘கிரேட் வால் மோட்டார்ஸ்’ நிறுவனத்துடன் ரூ3,770 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், சீனாவின் போடான் நிறுவனமும், ‘பிஎம்ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி நிறுவனமும் இணைந்து செயல்படும் வகையில், ரூ1,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலமாக 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாநில அரசு தெரிவித்தது.

மேலும், 2வது கட்டமாக தாலேகான் விரிவாக்க திட்டத்தில் சீனாவின் ஹெங்லி என்ஜினியரிங் நிறுவனம் ரூ250 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தம் செய் துகொள்ளப்பட்டது. இந்நிலையில், லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இதனை தொடர்ந்,து சீன நிறுவனத்துடன் மகாராஷ்டிரா அரசு செய்து கொண்ட ₹5000 கோடி மதிப்புள்ள 3 ஒப்பந்தங்களும் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா தொழிற்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறுகையில், “மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் தான் ஒப்பந்தங்களை முடக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள், எல்லையில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக கையெழுத்திடப்பட்டவை,’’ என்றார்.

Tags : border ,Maharashtra Government Action Fury ,Chinese ,companies , Chinese company, contract freeze, Maharashtra government
× RELATED இந்திய எல்லை அருகே சீன போர் விமானங்கள் நிறுத்தம்