×

சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் இந்திய வீரர் வீரமரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி, ரஜோரியின் நவுசாரா மற்றும் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலும் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. நவுசாராவில் எல்லைத் தாண்டி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ரோந்து பணியில் இருந்த இந்திய வீரர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் உயிரிழந்தார். ரஜோரி மற்றும் பூஞ்ச் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்த மாதம் இதுவரை 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

கடந்த 4 மற்றும் 10ம் தேதி ரஜோரியில் பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். இதேபோல், கடந்த 14ம் தேதி பூஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொரு வீரர் உயிரிழந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை 2,027 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர்  கூறுகையில், “அதிகாலை 3.30 மணியளவில் பூஞ்ச், கிருஷ்ணகாதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. சிறிய ஆயுதங்கள், வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. மீண்டும் காலை 5.30 மணிக்கு ரஜோரி நவுசாராவில் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம்தகுந்த பதிலடி கொடுத்தது,” என்றார்.

* ரஜோரி, பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்த மாதத்தில் நடத்திய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
* ஜம்மு காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம் இதுவரை 2,027 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

Tags : attack ,Indian ,Pakistani ,border , International Border, Pakistan Attack, Indian Warrior, Heroic Death
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...