×

சென்னையில் சட்டம் ஒழுங்கு போலீசார் ‘மிஸ்சிங்’ களத்தில் கலக்கும் போக்குவரத்து போலீசார்: 4 நாட்களில் 17,865 வழக்குகள் பதிவு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 19ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் வெளியே நடமாட போலீசார் அனுமதி  அளித்துள்ளனர். அப்படி வெளியே வரும் மக்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கடைகளுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்றும் பைக் மற்றும் கார்களை பயன்படுத்த  கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க மாநகர காவல் எல்லையில் 288 இடங்களில் போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்முறையாக கடந்த மார்ச் 24ம்  தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் இருந்த கெடுபிடி தற்போது இல்லை. காரணம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் 900 பேர் வரை நோய் தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கில், சட்டம் ஒழுங்கு போலீசார் முழுமையாக பணியில் ஈடுபட சற்று தயக்கம்  காட்டி வருகின்றனர். அதேநேரம் மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் கடந்த நான்கு நாட்களாக அதி தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகரம் முழுவதும் ஊரடங்க உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக நேற்று ஒரே  நாளில் அதிகபட்சமாக 7,261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5,009 பைக், 138  ஆட்டோக்கள், 231 கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 5,378 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில் கடந்த 4 நாட்களில் ஊரடங்கு  உத்தரவை மீறயதாக மொத்தம் 17,865 வழக்குகளும், 16 ஆயிரத்து 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை  கடைப்பிடிக்காமல் வெளியே சுற்றியதாக நேற்று மட்டும் 4,007 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களில் 7,524 வழக்குகள் பதிவு செய்து  அபராதமாக ரூ.37 லட்சத்து 62 ஆயிரம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கேட்டபோது, ‘தற்போது  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கின் போது வெளியே சுற்றும் வாகன  ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்ய போக்குவரத்து போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு போலீசாரும் தீவிரமாக வாகன சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : law enforcement police ,Chennai ,field , Chennai, Law and Order, Missing Field, Traffic Police
× RELATED நாடாளுமன்ற தேர்தல்: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு