×

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தெர்மல் ஸ்கேனர் வாங்கியதில் பல கோடி முறைகேடு?

* யாரை சோதனை செய்தாலும் 100 டிகிரிக்கு மேல் காட்டுகிறது
* தரமற்ற கருவிகள் கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டு

சென்னை: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தெர்மல் ஸ்கேனர் கருவி யாரை சோதனை செய்தாலும் 100 டிகிரிக்கு மேல் காட்டுவதாக களப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கருவி கொள்முதல் செய்ததில் பல கோடி முறைகேடு நடத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மைக்ரோ பிளான், காய்ச்சல் முகாம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய 12 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று சளி, காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் களப்பணியாளர்களிடம் பொதுமக்கள் உண்மையை தெரிவிக்காத காரணத்தால் பொதுமக்களின் உடல் வெப்பநிலை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் கருவியை அனைத்து களப்பணியாளர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக இந்திய நிறுவனம் ஒன்றிடம் இருந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிகே58பி என்ற வகையைச் சேர்ந்த 12 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவியை  சென்னை மாநகராட்சி மொத்தமாக கொள்முதல் செய்தது. இந்நிலையில் இந்த கருவிகள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு தெர்மல் ஸ்கேனர் கருவியின் எம்ஆர்பி விலை ரூ9175 அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக கொள்முதல் செய்ததில் விலை குறைப்பு செய்து இருந்தால் கூட ஒரு கருவியை ரூ4 ஆயிரம் முதல் ரூ6 ஆயிரம் ரூபாய்க்குதான் வாங்கி இருக்க முடியும் என்று மருத்துவ உபகரணங்கள் சார்ந்த துறையில் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இதைவிட குறைவான விலையில் தமிழகத்தில் இந்த கருவிகள் கிடைக்கும்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவியை ஏன் வாங்க வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் ஒரு தெர்மல் ஸ்கேனர் ரூ2 ஆயிரம் முதல் ரூ5 ஆயிரம் வரையில் கிடைக்கிறது. அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் ரூ1499 முதல் ரூ4  ஆயிரம் விலையில் இந்த ஸ்கேனர் கிடைக்கிறது. மொத்தமாக வாங்கினால், இதை விட மிகவும் குறைவான விலையில் வாங்கியிருக்க முடியும். எனவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருவியை இவ்வளவு விலை கொடுத்து ஏன் வாங்க வேண்டும் என்று மருத்துவ துறை சார்ந்த நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையில் இந்த கருவியின் தரம் தொடர்பாக மாநகராட்சி களப்பணியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தனர்.

இதன்படி மாநகராட்சி களப்பணியாளர்கள் சோதனை செய்யும் அனைவரின் உடல் வெப்பநிலையும் 100 டிகிரிக்கு மேல் இருக்கிறது என்று அந்த கருவி காட்டியுள்ளது. இதனால குழப்பம் அடைந்த களப்பணியாளர்கள் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட உயர் அதிகாரிகள், நீங்கள் சோதனை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கருவிகள் இல்லாமல் இருக்கக்கூடாது. எனவே எப்போதும் கருவியை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட களப்பணியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தெர்மல் ஸ்கேனர் கருவிகளை காட்சிப் பொருளாக கையில் வைத்துக் கொண்டு வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது வாங்கிய உபகரணங்களும் தரம் இல்லாதது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே இந்த உபகரணங்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டது, ஒரு உபகரணத்தின் விலை என்ன, கொள்முதல் செய்வதற்கு முன்பாக தர பரிசோதனை செய்யப்பட்டதா என்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மருத்துவ உபகரணம் சார்ந்த துறையில் பணியாற்றுபவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த தரமற்ற தெர்மல் ஸ்கேனர் 100 டிகிரிக்கு மேல் காட்டுவதால், மொத்தமாக பீதியில் பலரும் தங்களுக்கு காய்ச்சல் வந்திருப்பதாக கருதி டெஸ்ட் எடுக்கச் செல்கின்றனர். இதனால் டெஸ்ட் எடுக்க 2 அல்லது 3 நாள் வரை தாமதம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் பொதுவாக சென்னையில் பல இடங்களில் பிசிஆர் டெஸ்ட் எடுத்தவர்களுக்கு பாசிட்டிவ் என்று காட்டுகிறது.

அவர்கள் மீண்டும் எடுத்தால் நெகட்டிவ் காட்டுகிறது. இதனால் பிசிஆர் டெஸ்ட் மீதும் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதை நம்பித்தான் பலருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக பிசிஆர் கருவியை நம்பி மருத்துவமனையில் சேருகின்றனர். பின்னர் 2 நாளில் நெகட்டிவ் வருகிறது என்று சொல்லி 5வது நாளில் வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர். இவ்வாறு எந்த அறிகுறியும் இல்லாதவர்கள் பலர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதால், நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து விடுகிறது. டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனை நிரம்பி வழிகிறது. மருத்துவமனை நிரம்பி வழிவதால், கல்லூரிகளையும், பள்ளிகளையும், விடுதிகளையும் கேட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கும் தற்போது நிரம்பி வழிகிறது.

இதனால் அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க முடிவதில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுங்கள். மூச்சு விட கஷ்டமாக இருப்பதாக தெரிந்தால் மருத்துவமனைக்கு வாருங்கள் என்று அதிகாரிகள் கூறிவிடுகின்றனர். அவ்வாறு மருத்துவமனைக்கு வருகிறவர்கள் 2 நாளில் இறந்து விடுகின்றனர். இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசுக்கும் கெட்ட பெயர் வருகிறது. பொதுமக்களும் பீதியடைகின்றனர். கடைகள் மூடப்படுவதால் பொருளாதாரம் பாதிக்கிறது. பலர் வேலைகளை இழக்கின்றனர். பலர் வாடகை வீடுகளில் கூட வசிக்க முடியாமல் சொந்த ஊருக்கு தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் ஆரம்ப கட்டத்தில் பரிசோதிக்கப்படும் ஒரு தரமற்ற கருவி வாங்குவதால்தான்.

இடைதரகு நிறுவனம் ஏன்?
சீன நிறுவனத்திடமிருந்துதான் இந்த கருவியை வாங்க வேண்டும் என்றால் நேரடியாக வாங்கி இருக்கலாம். ஆனால் இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து இந்த கருவி வாங்கப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து நிறுவனத்திடம் இருந்த வாங்கிய போது கருவியின் விலை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் மீண்டும் அந்த முறையில் இந்த கருவி வாங்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

லாடம் போனால் ஆட்சிக்கு லாடம் கட்டப்படும்
‘ஃபார் வான்ட் ஆஃப் எ நெய்ல்’ என்று ஓர் ஆங்கில பழமொழி உள்ளது. 13ம் நூற்றாண்டு பழமையானது. பல நூற்றாண்டுகளில் இது கவிதை உள்ளிட்டு பலவித மாற்றம் பெற்று தொடர்ந்து வருகிறது. அற்பமான ஒன்றில் கோட்டை விடுவதால் பேரரசுகளும் சாம்ராஜ்யங்களும் சாயும் என்பதே இதன் பொருள். இக் கவிதையில் தெரிவிக்கப்படுவது இதுதான்: எதிரிநாட்டு படை நிலவரங்கள் குறித்து அறிந்து வர வேண்டிய ஒற்றனுக்கு அதிவேகமாக விரையும் குதிரை முக்கியமானது. அந்த வீரன், எதிரிநாட்டு படைகள் நம் நாட்டை சூழ்ந்திருக்கிறது என்ற தகவலை தெரிந்து குதிரையில் மின்னல் வேகத்தில் வந்து தமது நாட்டு படைகளை உஷார்படுத்தி, போருக்கு அவர்களை தயாராக வைத்திருக்க உதவி செய்ய வேண்டும்.

ஆனால் அந்த வீரனின் குதிரை லாடத்தை பொருத்தும் ஓர் ஆணி உடைந்துவிட்டால், லாடம் உடையும். குதிரையால் வேகமாக ஓட முடியாது. வேகமாக ஓட முடியாவிட்டால், எதிரி படைகள் குறித்த தகவலை வேகமாக கொண்டு சேர்க்க முடியாது. அவ்வாறு கொண்டு சேர்க்க முடியாத காரணத்தால், அவனது நாட்டு படைகள் தயாராக இருக்க முடியாது. அவ்வாறு தயாராகாத படைகளுக்கு அரசனும் எந்த உத்தரவும் போட முடியாது. அப்போது எதிரி நாட்டு படைகள் சுலபமாக கோட்டைக்குள் ஊடுருவி, எந்த தயாரிப்பும் இல்லாத படைகளை வென்று ஆட்சியை பிடித்து விடும். குதிரையின் லாடம் என்கிற சின்ன விஷயத்தை கவனிக்காததால் பேரரசு கவிழ்ந்துவிட்டது. அதுபோலத்தான் தெர்மல் ஸ்கேனர் என்கிற சிறிய கருவியை தரமற்று வாங்குவதால் அதன் தொடர்ச்சியாக மிகப்பெரிய அ்ழிவுகள் நேர்கின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : purchase ,China , China, Thermal Scanner, multi-crore scam
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு