×

திருமுல்லைவாயல் பகுதியில் கால்வாய் அடைப்பால் சாலையில் கழிவுநீர் தேக்கம்: சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், 8வது வார்டில் சரஸ்வதி நகர் பிரதான சாலையில் தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபம் மற்றும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இச்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும், இந்த பிரதான சாலையின் வழியாக 20க்கும் மேற்பட்ட நகரங்களுக்கும், அரிக்கம்பேடு, வெள்ளானூர், பொத்தூர், உப்பிரபாளையம், காட்டூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளும் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சரஸ்வதி நகர் பிரதான சாலையில் இரு புறமும் மழைநீர் கால்வாய் அப்போதைய நகராட்சி நிர்வாகம் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.இந்த கால்வாயில் வீடுகள், தனியார் மருத்துவமனை, ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் விடப்படுகிறது. இதனால், இந்த கால்வாய் சமீபகாலமாக கழிவுநீர் கால்வாயாக மாறி வருகிறது. இந்த கால்வாயை ஆவடி மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. இதனால், கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தத்தளிக்கிறது. மேலும், கடந்த சில மாதங்களாக இந்த கால்வாயில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், தற்போது கால்வாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடி கழிவுநீர் சாலையில் தேங்கியும் நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், கழிவுநீரை கால்களில் மிதித்தபடி நடந்துதான் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. மேலும்,  கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன. சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.  இதுகுறித்து, ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தும் பலனில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய் அடைப்புகளை நீக்கி கழிவு நீர் வெளியேறுவதை தடுக்கவும், தூர்வாறி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : road ,Thirumullaivayal , Thirumullaivayal, canal blockage, sewage stagnation
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி