×

மணல் கடத்தல் அதிகரிப்பால் காடாக காட்சியளிக்கும் கூவம் ஆறு: கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் படுகைகளில், மணல் கொள்ளை அதிகரித்து வருவதால், கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல கூவம் ஆறு காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் சீராக செல்ல சீமைக்கருவேல மரங்களை அகற்றவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம், ஆரணி, கொசஸ்தலை ஆறுகள் உள்ளன. மப்பேடு, கடம்பத்தூர், மணவாளநகர், செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் கூவம் ஆறு செல்கிறது. திருத்தணி, கே.கே.சத்திரம், திருவாலங்காடு, திருவள்ளூர் தாலுகா, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலைய எல்லை வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது.

வெங்கல், பெரியபாளையம், ஆரணி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் ஆரணி ஆறு செல்கிறது. இந்த மூன்று ஆறுகளில் பல ஆண்டுகளாக, மணல் கொள்ளை கனஜோராக நடந்து வருகிறது. இரவு 11 மணிக்கு மேல் துவங்கும் மணல் கடத்தல், அதிகாலை 5 மணி வரை நடக்கிறது. லாரிகளையே மூழ்கடிக்கும் பள்ளங்களை, மணல்  கொள்ளையர்கள் ஆறுகளில் உருவாக்கி உள்ளனர். பழைய திருடர்கள் தொடர்ந்து மணல் கடத்தலில் கவனிக்க வேண்டிய போலீசாரை முறையாக கவனித்து ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக மணல் எடுக்க செல்பவர்கள்தான் போலீசிலும், வருவாய் அதிகாரிகளிடமும் சிக்குகின்றனர். இவ்வாறு, மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் சுரண்டப்படுவதால், ஆற்றுக்குள் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது.

குறிப்பாக கூவம் ஆறு துவங்கும் நரசிங்கபுரம், பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, ஏகாட்டூர், அரண்வாயல், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மணல் கொள்ளை நடந்ததால், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல கூவம் ஆறு காட்சி அளிக்கிறது. இதனால், மேற்கண்ட பகுதிகளில் நிலத்தடி நீரும் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.எனவே, ஆற்றுப்படுகைகளில் தொடரும் மணல் திருட்டை கட்டுக்குள் கொண்டு வருவதோடு, மழைக்காலங்களில் மழைநீர் சீராக செல்லும் வகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை இல்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகரம், ஈக்காடு, பூந்தமல்லி ஒன்றிய பகுதிகளில் கடுமையான ஊரடங்கு அமுலில் உள்ளது. இதனால் மற்ற பகுதி போலீசார், இங்கு வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி பகலில் மணல் சேகரிப்பிலும், இரவில் மணல் கடத்தலிலும் கொள்ளையர்கள் கூவம் ஆற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராம பகுதிகளுக்கு இரவு ரோந்து செல்லாமல், ஆற்று படுகைகளுக்கு மட்டும் வருமானம் கருதி போலீசார் ரோந்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், அதை எஸ்பியின் கவனத்திற்கு அங்கு பணியில் உள்ள போலீசார் கொண்டு செல்வதில்லை என கூறப்படுகிறது.

Tags : forests Forests , Sand Trafficking, Goovam River, Karuwale Trees
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...