×

கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் திடீர் நிறுத்தம்

ஊத்துக்கோட்டை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி  தண்ணீர் வழங்க வேண்டும். கடந்த வருடம் ஜூலை மாதம் ஆந்திர அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காததால், இந்த தவணை காலத்தில் தண்ணீர் திறக்க கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். ஆனால், கண்டலேறுவில் போதிய அளவு  தண்ணீர் இல்லை என  கூறி தண்ணீர் திறக்க ஆந்திர அரசு  மறுத்து விட்டது.

இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை காரணமாக ஆந்திராவில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆந்திர அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து, தமிழகம் சார்பில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா வழியாக கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 13 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது.  கண்டலேறு அணையில் கடந்த வருடம்  செப்டம்பர் மாதம் 25ம்  தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆந்திர அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 8 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 7.5 டிஎம்சி தண்ணீர் தந்தது.

இதற்கிடையில், மீதமுள்ள அரை டிஎம்சி தண்ணீரையும் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஆந்திர அரசிடம் மீண்டும் கோரிக்கை வைத்தது. அதன்பேரில், ஆந்திர அரசு கடந்த மாதம் 25ம் தேதி 500 கனஅடி வீதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீர், 27ம் தேதி 1,200 கன அடியாக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 152 கி.மீ. கடந்து 4 நாட்களுக்கு பிறகு 28ம் தேதி இரவு 8.40 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ண நீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதுவரை, தமிழகத்திற்கு 8.52 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Krishna Water Sudden Discontinuation Krishna , Kandalur dam, Krishna water, sudden stop
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...