×

கல்பாக்கம் தீயணைப்பு வீரர் கொரோனாவுக்கு பலி: மதுராந்தகம் ஒன்றிய அலுவலக பொறியாளருக்கு தொற்று

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் 46 வயது மதிக்கத்தக்க ஒருவர், வீரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீரருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 3ம் தேதி அவருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து, அவரது மனைவி மற்றும்  மகள்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தது. அவர்களும், அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

அதில், மகள்கள் மட்டும்  சில தினங்களுக்கு முன்பு குணமாகி வீடு திரும்பினர். இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தீயணைப்பு வீரர், சிகிச்சை பலனின்றி நேற்று  பரிதாபமாக இறந்தார்.மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த அலுவலகத்தின், முதல் மாடியில் பொறியாளர்களுக்கான பிரிவு செயல்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பொறியாளர் ஒருவர் பணிபுரிகிறார். அவருக்கு, கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது.இதையடுத்து அவர், நேற்று முன்தினம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
இதையடுத்து, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பொறியாளர் பிரிவு இயங்கி வந்த முதல் மாடி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் அவசிய தேவைகளுக்காக தரை தளத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் தொடர்ந்து செயல்பாடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வட்டார வளர்ச்சி அலுவலகம் முழுவதும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் கிருமிநாசினிகள்,  சானிடைசர்கள்  கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. இங்கு, பணிபுரியும் அனைவருக்கும் விட்டமின் மாத்திரைகள்,  முகக் கவசங்கள், கையுறைகள்  வழங்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் பணிபுரிகின்றனர்.திருப்போரூர்:  திருப்போரூர் பேரூராட்சி கண்ணகப்பட்டு பகுதியில் வசித்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வசித்த தெருவில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அதேபோன்று கேளம்பாக்கம், தாழம்பூர், நாவலூர் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும், தையூரில் 2 பேருக்கும், படூரில் 3 பேருக்கும் நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதியானது.இதனிடையே ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்த மேலாளர் மற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதியானது. இதனால், அந்த நிறுவனத்தில் அவர்கள் வேலை செய்த பிரிவு மட்டும் மூடப்பட்டது.

48 பேருக்கு தொற்று உறுதி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால், 220 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். குன்றத்தூரை சேர்ந்த வெல்டர் உள்பட 10 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் 17, பெரும்புதூரில் 9 பேர், குன்றத்தூர், அய்யப்பன்தாங்கலில் தலா 4, உத்திரமேரூர், மாங்காடு, கொளப்பாக்கம் பகுதிகளில் தலா 2, படப்பை, கெருகம்பாக்கம், திருமுடிவாக்கம், தண்டலம், கொளுத்துவாஞ்சேரி, வசந்தபுரம், பெரியபணிச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 1 என மொத்தம் 48 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதன்மூலம், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் 10, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1207 என உயர்ந்துள்ளது.

Tags : firefighter ,Kalpakkam ,Corona ,office engineer ,Infection of Union ,Union , Kalpakkam firefighter, corona, corporation union office engineer, infection
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...