×

வீடுகளுக்கு வழங்கும் குடிநீர் பைப்பில் மோட்டார் மூலம் திருட்டுத்தனமாக உறிஞ்சுவதால் தண்ணீர் பற்றாக்குறை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

வாலாஜாபாத்:  வாலாஜாபாத் பேரூராட்சியில், வீடுகளுக்கு வழங்கும் குடிநீர் பைப்பில் மின் மோட்டார் மூலம், திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சுவதால், மற்றவர்களுக்கு தண்ணீர் பற்றக்குறை ஏற்படுகிறது.வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  இப்பகுதி மக்களுக்கு வாலாஜாபாத் ஒட்டியுள்ள பாலாற்று படுகையில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம், தினமும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி, பின்னர் அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில் வாலாஜாபாத்தில் உள்ள 15 வார்டுகளிலும் தேவைக்கேற்ப பாலாற்று குடிநீரை பிடிப்பது இன்றி, சில வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரை, திருட்டுத்தனமாக மின் மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக  புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, பேரூராட்சியில்  உள்ள 15 வார்டுகளிலும் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகிக்கும் நேரங்களில்  சிலர், நீச்சல் குளங்கள் போல வீடுகளில் கட்டப்பட்டுள்ள சம்ப்புகளில் குடிநீரை நிரப்புகின்றனர். இதற்காக, அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீரை திருட்டுத்தன்மாக உறிஞ்சி எடுக்கின்றனர். இதையொட்டி, அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமம் அடைகிறோம்.

இதுதொடர்பாக, பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த பிறகு, குடிநீர் வினியோகிக்கும் நேரங்களில் மின் மோட்டார்கள் பயன்படுத்துவர்களை கண்காணித்து பறிமுதல் செய்கின்றனர். ஆனாலும், இப்பகுதியில் மின் மோட்டார் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதுபோல், கோடை காலங்களில் மோட்டார் பயன்பாடுகள் அதிகரித்தால், மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகிறது. இந்த விவகாரத்தில்  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அதிக திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தும் வீடுகளை கண்டறிந்து, மிகப் பெரிய நீச்சல் குளம் போல் அமைக்கப்பட்டுள்ள சம்புக்களை உடனடியாக அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : theft ,homes ,households ,motorist , Drinking water pipe, water shortage, public indictment
× RELATED ஏப்.3 முதல் தீவிர பிரசாரம் 8 கோடி...