×

ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கக்கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 2019-20 முதல் 2021-22ம் கல்வியாண்டுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு 2019 செப்டம்பர் 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், விதிகளை பின்பற்றி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கூறி, கட்டண நிர்ணயக் குழு உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில், செலவுகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்த 85 கல்லூரிகளுக்கு ஒரு மாணவருக்கு 42 ஆயிரத்து 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்தது.

கட்டண நிர்ணயத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்காத 200 கல்லூரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 411 கல்லூரிகள் கட்டண விகிதங்களை சமர்ப்பிக்காததால், அவற்றுக்கு 22ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டது.கட்டண நிர்ணயக் குழு தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி இறந்து விட்டதால், கல்லூரிகளின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான சிறப்பு  அரசு பிளீடர் மனோகரன் கட்டண நிர்ணயக்குழுவுக்கு தற்போது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Teacher Education Colleges , Teacher Education College, Govt
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...