×

வீடுவீடாக சென்று கொடுக்காமல் தெருவில் மக்களை வரிசையாக நிற்கவைத்து ரூ1000 நிவாரணம் வழங்கியதால் பரபரப்பு: அரசின் உத்தரவு காற்றில் பறந்தது

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 7,46,780 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ1000 வீடு வீடாக வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது. வீடு வீடாக சென்று நிவாரண உதவிகளை வழங்காமல், சாலையில் மொத்தமாக நிற்க வைத்து வழங்கியதால், அரசின் உத்தரவை அதிகாரிகளே மதிக்காமல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 7,46,780 பேருக்கு தலா ரூ1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி 22ம் தேதி (நேற்று) முதல் வருகிற 26ம் தேதி வரை 5 நாட்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே வந்து ரூ1000 வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி, நேற்று முதல் தலா ரூ1000 வழங்கும் பணி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4 மாவட்டத்திலும், முதல்வரின் உத்தரவை மீறி, வீடுகளுக்கு சென்று வழங்காமல், தெரு முனையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு அந்த  பகுதியில் உள்ளவர்களை வரவழைத்து நீண்ட வரிசையில் நிற்கவைத்து ரூ1000 வழங்கினர். இதனால் சமூகஇடைவெளி இல்லாமல் கூட்டம் முண்டியடித்தது. கூட்டம் சேர்கிறது என்பதற்காகத்தான் ரேஷன்  கடைகளில் வைத்து கொடுக்காமல் வீடுகளுக்கு சென்று கொடுக்க வேண்டும் என்று  அரசு கூறியது.

ஆனால் இப்போது கடை முன்பு கூடிய கூட்டத்தை விட தெருவில் அதிக கூட்டம் கூடியது. அரசு அறிவிப்பு இப்படி காற்றில் பறந்தால், கொரோனா நோய் தொற்று  குறைவதற்கு பதில், இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று  பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு பதில், ரேஷன் கடையிலாவது வழங்கியிருக்கலாம். இதை விட கூட்டம் குறைவாகத்தான் இருக்கும் என்றும் தெரிவித்தனர். தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில்தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. அந்தப் பகுதிகளில் கூட பொதுமக்களை இதேபோல கூட்டமாக வரவழைத்து, வரிசையில் நிற்க வைத்து ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினர்.

சொந்த ஊர் போனவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்குமா?
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பேர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள ₹1000 இவர்களுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு சங்க உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘₹1000 வழங்கும் பணி 26ம் தேதி வரை நடைபெறும். விடுபட்டவர்கள் 29 மற்றும் 30ம் தேதி ரேஷன் கடைகளுக்கு வந்து பெற்றுக் கொள்ளலாம். சொந்த ஊருக்கு சென்றதால் ரூ1000 பெற முடியாதவர்களுக்கு ஜூலை மாதம் ₹1000 வழங்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசு அறிவிக்கும்’’ என்றார்.

Tags : government ,Rs ,street , Relief, Government Order, Madras
× RELATED மக்களவை தேர்தல் நேரத்தில் ரூ.1.65 லட்சம்...