×

7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிவிட்டு நளினி-முருகன் பேச அனுமதி மறுப்பது ஏன்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும். ஆனால் கடந்த 3 மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் முருகன் சிறையில் ஜூன் 1ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எனவே, அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், நளினியும் முருகனும் சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, சிறை விதிகளின்படி, இருவரையும் சந்தித்து பேச கூட அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.  பின்னர், இந்த மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags : Nalini-Murugan , 7 are released, Nalini-Murugan, Speaker, Tamil Nadu Government, High Court
× RELATED நளினி- முருகன் சந்திப்பு வேலூர் மத்திய சிறையில்