×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு 3 பெண்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் சிக்கிய 3 பெண்கள் முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கடந்த ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. அதில் முக்கியமாக, ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய பலர் தேர்ச்சி பட்டியலில் முதல் 100 இடங்களை பிடித்தனர். இதை தொடர்ந்து, பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து,  டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தியது. அதில், விடைத்தாள்களில் திருத்தம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, குரூப் 4 தேர்வு மட்டுமல்லாமல், குரூப் 2ஏ தேர்வு மற்றும் விஓஏ தேர்வு ஆகியவற்றில் மோசடி நடந்து இருப்பதும், ஒரு கும்பல் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதும், இதற்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் பலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. எனவே, முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், சிவகங்கை மற்றும் மானாமதுரையைச் சேர்ந்த பவானி, சரண்யா, உமா மகேஸ்வரி ஆகியோர் ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் 3 பேரும் உறவினர்கள். இதனால் அவர்கள் ஒரே மையத்தை தேர்வு செய்தனர். அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களை கைது செய்தால் குடும்பம் பாதிக்கப்படும் என்றார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு முகாந்திரம் உள்ளது. இவர்களை முன்ஜாமீனில் விடுவித்தால் தவறு செய்த மற்றவர்களும் முன்ஜாமீன் கோருவார்கள். இது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : DNPSC ,TNPSC , DNPSC Examination Scandal, Munitions, Petition dismissed, Sessions Court
× RELATED 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான...