×

டவுன் நயினார்குளத்தில் அமலை செடிகள் தீ வைத்து அழிப்பு

நெல்லை: நெல்லை டவுன் நயினார்குளத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள அமலை செடிகள் தீ வைத்து அழிக்கப்பட்டன. நெல்லை மாநகர மைய பகுதியில் 244 ஏக்கரில் பரந்து விரிந்து காட்சியளிக்கும் நயினார் குளத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நெல்லை கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது நயினார்குளம் ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகள் கட்டிட இடிபாடுகளை கொட்டுவதாலும் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.  மேலும் குளத்தை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியாகும் சாக்கடை கழிவுகளும் நேரடியாக கலப்பதால் தண்ணீர் மாசுப்பட்டு காணப்படுகிறது. குளம் முழுவதும் மண்மோடாக கணப்படுகிறது.

தற்போது நெல்லை கால்வாயில் தண்ணீர் இல்லாத காரணத்தால் குளத்தில் தண்ணீர் வற்றி காணப்படுகிறது. இதன் காரணமாக குளத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த அமலை செடிகள் காய்ந்து கருகியது. இதனை மீண்டும் வராமல் தடுக்க அப்பகுதியினர் தீ வைத்து அமலை செடிகளை எரித்து சாம்பலாக்கினர்.மேலும் நயினார்குளத்தின் கரைகளில் அதிகப்படியான அமலைச்செடிகள் அள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனை விரைந்து அழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பருவ மழைக்காலத்தில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மீண்டும் நயினார்குளத்தில் விழுந்து குளத்தை ஆக்கிரமிப்பு செய்துவிடும். எனவே குளக்கரையில் உள்ள அமலை செடிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.



Tags : town , Town, Nainarkulam, Amala plants
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி