×

இங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் நடத்தி 3 பேரை கொலை செய்த வாலிபர் குறித்த பகீர் பின்னணி

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்தின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் போர்பரி என்ற பூங்கா உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த பூங்காவில் வழக்கம் போல் மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்துக்குள் புகுந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென சத்தமிட்டு தான் வைத்திருந்த கத்தியால் கண்ணில் தென்பட்ட மக்கள் மீது குத்தத் தொடங்கியுள்ளார்.

இதனால் பூங்காவில் பெரும் பதற்றமான சூழல் காணப்பட்டது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஆனாலும் அந்த வாலிபர் சற்றும் ஈவிரக்கமின்றி விரட்டிச் சென்று கத்தியால் குத்தினார். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதற்கிடையே இந்த வாலிபரின் வெறிச் செயல் குறித்து அங்கிருந்த மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

எனினும் இந்த கொடூர தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கத்திக்குத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பலரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேம்ஸ் வேலி போலீசின் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர் இயான் ஹன்டர் கூறியதாவது: இந்தத் தாக்குதலில் ஒரு வாலிபரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வாலிபர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது என கூறினார்.

தற்போது இந்த வாலிபர் குறித்து மேலதிக தகவல்கள் தெரியவந்துள்ளது. அவரது பெயர் கைரி சதல்லா (வயது 25) 16 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலையாவதற்கு முன்னர் மனஉளைச்சல் மற்றும் உளவியல்ரீதியான பிரச்சினைக்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளார்.மேலும் 2018 ஆம் ஆண்டில் வன்முறை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்தில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது.

சிரியாவுக்கு செல்ல வேண்டும் என்ற இவரது ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு சில மாதங்கள் இங்கிலாந்தின் உளவு அமைப்பின் கண்காணிப்பு வட்டத்தில் இருந்துள்ளார். வன்முறைக்கான குற்றச்சாட்டுகளும் உளவியல் பிரச்சினையும் உள்ள  ஒரு இளைஞரை இங்கிலாந்து ஏன் மேலும் 5 ஆண்டுகள் தங்கிக் கொள்ள அனுமதித்தது என்ற கேள்வி தற்போது முன்வைக்கப்படுகிறது. ஆனால் லிபியாவில் பயங்ரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் சதல்லா அங்கிருந்து தப்பித்துக்கொள்ள இங்கிலாந்து வந்ததாகவும், அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : UK ,Bakeer ,park , UK, park, attack, 3 people, murder, plaintiff, background
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...