×

முடங்கிய ஜிம், கிளப்புகள்...... மீண்டும் விளையாட அனுமதி அளிக்கப்படுமா?: பயிற்சியும் போச்சு....மகிழ்ச்சியும் போச்சு......

நாகர்கோவில்: விளையாட்டு கிளப்புகளில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லாத விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச் மாதம் முதல் திருமண மண்டபங்கள், ஏசி பொருத்திய பெரிய வர்த்தக நிறுவனங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு மன்றங்கள் படிப்படியாக மூடப்பட்டன. மார்ச் 24ம் தேதி மாலை முதல் முழு ஊரடங்கும்  அறிவிக்கப் பட்டது. கொரோனாவிற்கு முன்பு  மக்களின் பணிப்பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தம், உணவு பழக்கம் போன்ற வாழ்வியல் முறை காரணமாக சர்க்கரை நோய் மற்றும் ரத்தகொதிப்பு போன்ற நோய்களின் தாக்கத்திற்கு பாலினம், வயது வித்தியாசம் இன்றி அதிகம் பேர் பாதிக்கபட்டுள்ளனர். இதனால், மருந்துகள், கட்டுப்பாடான உணவு பழக்கத்துடன், மனஅழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி அடையவும், உடலுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், நடைபயிற்சி மட்டும் இன்றி பல்வேறு விளையாட்டுகளில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஈடுபட்டுள்ளனர்.

தற்பொது ஊரடங்கு காரணமாக இவை அனைத்தும் தடைபட்டு விட்டது. 50 சதவீத ஊழியர்களுடன்அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் கடந்த மே மாதம் இறுதி முதல் படிப்படியாக செயல்படத் தொடங்கி விட்டன. சமூக இடைவெளி, கைகளை சோப்பு அல்லது சானிட்டைசர் மூலம் கழுவுதல், முக கவசம் அணிவது இவற்றை கடைபிடிக்க அரசு அனுமதித்துள்ளது. இதனால் மீண்டும் பணிக்கு திரும்பியவர்கள், தங்களது மனஅழுத்தம் போக்குவதற்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் இல்லாத தனிநபர் விளையாட்டுகள், பயிற்சிகள் அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவிலை பொறுத்தவரை 1930 முதலே பல்வேறு விளையாட்டுகள் நூலகம் உள்ளடங்கிய கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. டவுன் கிளப், டிஸ்ட்ரிக்ட் கிளப், ராமவர்மபுரம் கிளப் என பெரிய கிளப்புகளும், 20க்கும் மேற்பட்ட தனியார் கிளப்புகளும் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன. இதுதவிர அண்ணா விளையாட்டரங்கிலும் பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஷட்டில், டேபிள் டென்னிஸ் போன்ற தனிநபர் மற்றும் இருவர் சமூக இடைவெளியுடன் விளையாடும் விளையாட்டுக்களையும், கராத்தே, டேக் வாண்டோ போன்ற சமூக இடைவெளியை கடைபிடிக்க வாய்ப்புள்ள பயிற்சிகள், மனதை ஒருமுகப்படுத்தும் யோகா போன்ற பயிற்சிகளை தகுந்த வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் அனுமதிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பல்வேறு பிரச்சனைகள் எழும்
நடைபயிற்சி, மூச்சு பயிற்சியான யோகா போன்றவை தொடர்ந்து பின்பற்ற மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். கூட்டமாக இன்றி தனிநபராக யாருக்கும் பாதிப்பின்றி இந்த பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், நடைபயிற்சி மேற்கொள்ள பள்ளிகள், பூங்காக்கள் அடைக்கப்பட்டுள்ளதால், நகர வாசிகள் இதற்கு வழியின்றி தவிக்கின்றனர். கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை இல்லை. ஆனால், நகரில் வசிப்பவர்களுக்கு இடமில்லை. இதற்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்களுடன், கருத்துக்கள் கேட்டு, அவர்கள் பயிற்சி மேற்கொள்ள காலை மற்றும் மாலை வேளைகளில் அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் பள்ளிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு திறந்து அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Gym ,Clubs , Gym and Clubs , Will , allowed, play again?
× RELATED தகுதியுடையோர் விண்ணப்பிக்க விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை