×

திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற கழிவறையால் கொரோனா நோயாளிகள் அவதி

* சத்தான உணவு வழங்குவது இல்லை
* ரேஷன் அரிசி சாதம் வழங்கல்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற கழிவறையால் கொரோனா நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சத்தான ஆகாரம் வழங்குவது இல்லை. மதியம் ரேஷன் அரிசி சாப்பாடு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று முதல்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கடுத்து ஜனவரி 21ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டனில் தொற்று பரவியது. இந்தியாவில் பிப்ரவரி இறுதியில் பரவியது. இதையடுத்து தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் பரவியது. தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சியில் முதன்முதலாக கொரோனா தொற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஈரோடு வாலிபரால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதன்பின் 700க்கும் மேற்பட்டவர்களக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கிருந்து இடம்பெயரும் நபர்களால் மற்ற மாவட்டங்களுக்கு ெதாற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று வார்டுகளில் முறையான பராமரிப்பு மற்றும் கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக கொரோனா நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் சூப், கீரை வகைகள், தரமான சாப்பாடு, பழங்கள் வழங்கப்படுவதாக கூறப்படுவதும் வெற்று நாடகம் எனவும் புகார் கூறுகின்றனர். திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு உள்ள 25 நோயாளிகளுக்கு ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. அந்த கழிவறையும் சுகாதாரமற்ற முறையில் அருவருக்கதக்க நிலையில் உள்ளது. இதுகுறித்து கொரோனா நோயாளி ஒருவர் கூறுகையில், கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இந்த கழிவறையை 25 பேர் பயன்படுத்த வேண்டும். இந்த கழிவறையை சுத்தம் செய்வது கிடையாது. கழிவறையில் கிருமி நாசினி தெளிப்பது இல்லை.

சுகாதாரமற்ற முறையில் உள்ள கழிவறையை பயன்படுத்தும் போது மேலும் வேறு ஏதேனும் ஒரு தொற்று ஏற்படுகிறது. அரசு தெரிவிப்பது போல் சத்தான ஆகாரம், கீரை, பழங்கள், சூப் ஆகியவை வழங்கப்படுவதாக கூறுவது முற்றிலும் மோசடியாகும். காலை 4 இட்லி வழங்கப்படுகிறது. மதியம் ரேஷன் அரிசி சாப்பாடு வழங்கப்படுகிறது. காலை மற்றும் இரவு முட்டை வழங்கப்படுகிறது. மேலும் காலை மற்றும் இரவில் 5 மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதை தவிர வேறு ஒன்றும் வழங்கப்படுவது இல்லை. கொரோனா பாதிப்புக்கான மருத்துவ அறிக்கையை கேட்டால் கொடுக்க மறுக்கின்றனர். இரவில் மீதமான இட்லியை மீண்டும் காலையில் வழங்குகின்றனர். இதுபோல் 7 நாட்கள் ஒரு நோயாளியை குணமடைந்து விட்டதாக கூறி அனுப்பி வைக்கின்றனர். இதற்கான எந்த ஒரு மருத்துவ அறிக்கையையும் வழங்குவதில்லை என்றார்.

மருத்துவமனை டீன் விளக்கம்...
இதுகுறித்து மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வென்டிலெட்டர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக தற்காலிகமாக நோயாளிகளை மாற்றி உள்ளோம். ஆனாலும் நோயாளிகளை அதே மருத்துவமனையின் மாடிக்கு செல்ல கூறினால் மறுக்கின்றனர். நோயாளிகளுக்கு தினமும் சத்தான ஆகாரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சூப், கபசுர குடிநீர், 2 முதல் 3 முட்டை, நோய் எதிர்ப்பு டானிக் ஆகியவை வழங்கப்படுகிறது. முதல்முதலாக நோயாளிகளுக்கு மருத்துவ அறிக்கையை கடந்த 2 நாட்களாக வழங்கி வருகிறோம். மருத்துவ அறிக்கை தேவைப்படுவோர் மருத்துவமனைக்கு வந்து வாங்கி செல்லலாம். அரசு உத்தரவின் படி நோயாளிகளுக்கு அனைத்தையும் செய்து வருகிறோம். தற்போது வரை 200 தொற்று பாதிப்பு மட்டுமே வந்துள்ளது என்றார்.

Tags : restroom ,Trichy Government Hospital Coronal ,Trichy Government Hospital , Coronal patients ,suffer , unhygienic restroom, Trichy Government Hospital
× RELATED வயலூர் சாலையில் நவீன போலீஸ் சோதனை சாவடி