×

டிரைவர், கண்டக்டருக்கு மெமோ நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கூடுதல் பஸ்கள் இயக்கினால் கூட்டம் தானாக குறையுமே?

* தொழிற்சங்கத்தினர், பயணிகள் அரசுக்கு வலியுறுத்தல்

மதுரை: கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலானதால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1ம் தேதி முதல் அரசு பஸ்களும், 10ம் தேதி முதல் தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்பதால், 60 சதவீத பயணிகள் மட்டுமே பஸ்களில் ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 6 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பஸ்கள் இயங்குகின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் 39 டெப்போக்களில் 1,285 உள்ளூர் பஸ்கள், 881 வெளியூர் பஸ்கள் என 2,166 பஸ்கள் உள்ளன. இதில், 50 சதவீத பஸ்கள் என்ற அடிப்படையில் 1,083 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் 200 பஸ்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 194 பஸ்களும் இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களில் மட்டும் 1,477 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் தென்மாவட்டங்களில் 130 தனியார் பஸ்கள் பல்வேறு தடங்களில் இயக்கப்பட்டன. இவற்றில், 50 சதவீத பஸ்கள் என்ற அடிப்படையில் சுமார் 60 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. 52 முதல் 55 சீட்களை கொண்ட வெளியூர் பஸ்களில் 34 பயணிகளும், 40 சீட்களை கொண்ட உள்ளூர் பஸ்களில் 24 பயணிகளும் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது வழக்கமான வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. உள்ளூர் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தாலும், வெளியூர் செல்லும் பஸ்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடுகிறது. விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திண்டுக்கல், தேனி, கம்பம் உள்ளிட்ட பல தடங்களில் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத பயணிகள் அளவைத் தாண்டி 100 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கும் நிலை உள்ளது. குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆனால், கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வின்போது அதிக பயணிகளை ஏற்றி சென்றதாக கூறி டிரைவர், கண்டக்டர்களுக்கு மெமோ கொடுத்து நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்படுகிறது. இதற்கு ெதாழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து கழக மதுரை மண்டல தொமுச பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறுகையில், ‘‘சமூக இடைவெளியை பின்பற்ற 50 சதவீத பஸ்களில் 60 சதவீத பயணிகள் என அறிவித்துள்ளனர். இரவு 9 மணிக்குள் பஸ் போக்குவரத்தை முடிக்க வேண்டிய நிலை. இதனால், வெளியூர் பஸ்களில் அதிக பயணிகள் கூட்டமாக பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. விதிப்படி தான் பயணிகளை ஏற்ற வேண்டும் என்றால் பயணிகள் தகராறில் ஈடுபடுகின்றனர். வேறு வழியின்றி பயணிகள் ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் டிரைவர் - கண்டக்டர்கள் உள்ளனர். இவற்றை தவிர்க்கவும், முறைப்படுத்தவும் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். கூட்டத்தால் ஏற்படும் பிரச்னைகளுக்கு டிரைவர் - கண்டக்டர்கள் மீது நடவடிக்கை கூடாது. எங்கள் வேண்டுகோளை மீறி டிரைவர் - கண்டக்டர்கள் மீது நடவடிக்கை இருந்தால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

வெளியூர்களில் இருந்து பணிநிமித்தமாக தினமும் மதுரை வந்து செல்லும் நடைபாதை மற்றும் சாலையோர சிறு வியாபாரிகள் கூறுகையில், ‘‘பஸ்களை கூடுதலாக இயக்கினால், அதிகாரிகள் எதிர்பார்ப்பது போல 60 சதவீதப் பயணிகளை ஏற்றிச் செல்லலாம். குறைவான பஸ்களை மட்டுமே இயக்கி விட்டு, பயணிகள் ஏறுவதற்கு தடை விதிக்கச் சொல்வது என்ன நியாயம்? இரவ வரை வியாபாரம் செய்து முடித்து விட்டு கடைசி பஸ்சிற்கு நாங்கள் வரும்போது, பல நேரங்களில் கடைசி பஸ் போய் விடுகிறது. 7, 7.30 மணிக்கெல்லாம் புறநகர் பஸ்சை எடுத்து விடுகிறார்கள். அப்படியே ஒரு பஸ் இருந்தால், கூட்டம் கொஞ்சம் கூடுதலாக இருக்கத்தான் செய்யும். கூடுதல் பஸ்களை இயக்குவதன் மூலமும், பஸ் சர்வீஸ் நேரத்தை இரவு 9 மணிக்குப் பதில், இரவு 10 அல்லது 11 மணி வரையில் நீட்டிப்பதன் மூலமும் மட்டுமே இந்தப் பிரச்னையை சரி செய்யமுடியும்’’ என்கின்றனர்.

Tags : Extreme Buses From Driver And Conductor Memorandum Of Action , Driver,Conductor Memorandum, action, stop extra buses , tightly , crowdfunding?
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...