×

கடையம் வட்டார மலையடிவார கிராமங்களை மிரட்டும் கரடிகள்: 10 நாளில் 4 கரடிகள் கூண்டில் சிக்கின

கடையம்: கடையம் வட்டார மலையடிவார கிராமங்களுக்குள் புகும் கரடிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனச்சரக அலுவலக வளாகத்தில் வனத்துறை வைத்த கூண்டில் நேற்று 10 வயது ஆண் கரடி பிடிபட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து, காட்டுப்பன்றி, கரடி, மிளா, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மலையடிவார கிராம பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக பங்களா குடியிருப்பு, சிவசைலம், அழகாபுரம், கருத்தப்பிள்ளையூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் கரடிகள் மா, பலா, தென்னை உள்ளிட்டவற்றை  நாசப்படுத்தி வந்தன. மேலும் பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து வந்த புகாரையடுத்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கரடிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அவற்றை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன. இதில் ஏப்ரல் 29, மே 31, ஜூன் 12 ஆகிய நாட்களில் மூன்று கரடிகள் பிடிபட்டன. ஜூன் 16ல் காலையும் இரவும் இரண்டு கரடிகள் பிடிபட்டன. இந்நிலையில் தொடர்ந்து கரடி நடமாட்டம் இருந்ததால் பங்களா குடியிருப்பில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் கூண்டு வைக்கப்பட்டது.

இதில் நேற்று அதிகாலை 10 வயது ஆண் கரடி ஒன்று சிக்கியது. பிடிபட்ட கரடியை துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் தலைமையில் கடையம் வனச்சரகர் நெல்லைநாயகம், முண்டந்துறை வனச்சரக அலுவலர் சரவணகுமார், வனவர்கள் முருகசாமி, ஜெகன், வனக்காப்பாளர்கள் சோமசுந்தரம், சரவணன், வனக்காவலர் ரமேஷ்பாபு , வேட்டை தடுப்பு காவலர்கள், ஆம்பூர் கால்நடை மருத்துவர் சிவமுத்து, கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் உள்ளிட்டோர் முண்டந்துறை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். ஜூன் 12 முதல் ஜூன் 21 வரை பத்து நாட்களில் 4 கரடிகள் பிடிபட்டுள்ளது கடையம் வனச்சரக பகுதியில் உள்ள கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags : mountain villages , Bears intimidating, local mountain ,villages, 4 bears trapped , 10 days
× RELATED தண்ணீரின்றி கருகும் பயிர்களால்...