×

கொடைக்கானலில் கிணற்றில் தவறி விழுந்து காட்டுமாடு பலி

கொடைக்கானல்: கொடைக்கானலில் கிணற்றில் தவறி விழுந்து காட்டுமாடு பலியானது. கொடைக்கானல் மேல் குறிஞ்சி நகர் பகுதியில் பாத்திமா குருசடி அருகில் அஜிஸ் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு குடிநீருக்காக பெரிய கிணறு வெட்டப்பட்டு அதிலிருந்து குடிநீர் லாரி மூலம் எடுத்து தனியார் காட்டேஜ் மற்றும் ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் குடிப்பதற்காக இந்தப் பகுதிக்கு வந்த காட்டு மாடு கிணற்றுக்குள் தவறி விழுந்தது. வெளியே வரமுடியாமல் தவித்த காட்டுமாடு பரிதாபமாக பலியானது.

இதுகுறித்து வனத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று மாலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் விழுந்து பலியான காட்டுமாடை மீட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.  குடிநீர் கிணற்றுக்குள் காட்டுமாடு விழுந்து பலியானதையடுத்து இந்த கிணற்று நீரை சம்பந்தப்பட்ட துறையினர் பரிசோதனை செய்து பின்னர் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வல்லநாட்டில் இருந்து தப்பிய மான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை: வல்லநாடு மலையில் இருந்து தப்பி வந்த மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து தப்பி வந்த புள்ளி மான் ஒன்று புதுக்கோட்டை அருகே கீழக்கூட்டுடன்காடு காட்டுப்பகுதியில் சுற்றி திரிந்தது. அந்த மானை நாய்கள் விரட்டின. இதை பார்த்த கீழக்கூட்டுடன்காடு சேர்ந்த செல்வகுமார், சண்முகசுந்தரம், பாண்டி, ரமேஷ், பாலா ஆகியோர் மானை நாய்களிடம் இருந்து காப்பாற்றினர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஓட்டபிடாரம் வனவர் மகேஷ் வனகாப்பாளர்கள் பேச்சிமுத்து, முகமது பைசல்ராஜா, ஆசிப்அலி, வல்லநாடு பிரிவு வனகாவலர் கருப்பசாமி, வேட்டை தடுப்பு காவலர் காந்திராஜா ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மானை வல்லநாடு மலை பகுதியில் கொண்டு விட்டனர்.


Tags : Kodaikanal ,Wildlife Kills , Wildlife kills , Kodaikanal , falling , well
× RELATED கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை