×

வருவாய் இல்லாத நேரத்தில் அதிகரிக்கும் செலவுகள் நகை கடன் வாங்க வங்கிகளில் குவியும் நடுத்தர குடும்பத்தினர்: வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகரிப்பு

சேலம்: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நடுத்தர குடும்பங்கள்,  சிரமங்களை போக்குவதற்கு நகைக்கடன் கேட்டு வங்கிகளை மொய்ப்பது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் வழக்கத்தை விட, 30 சதவீதம் பேர் நகை கடன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா பரவலை தடுத்து நிறுத்த, கடந்த மார்ச் 24ம்தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய அரசு. 70 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த ஊரடங்கில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் பூட்டப்பட்டது. இதன் மூலம் கொரோனாவின் தாக்கம் குறைந்ததோ இல்லையோ, கோடிக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களில் வறுமையும் இணைந்து தாண்டவம் ஆடத்தொடங்கியது.  தங்களது உழைப்புக்கு ஏற்ற வகையில் மக்களுக்கு கிடைத்த அன்றாட வருவாய்,மாத வருவாய், சிறுதொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் என்று குடும்பம் நடத்த கிடைத்த அனைத்து நிலை வருவாயும் பறிபோனதே இதற்கு காரணம். இப்படி வாழ்க்கை போர்க்களமாகி விட்ட நிலையில், போராடித்தான் வாழ வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் அனைத்து தரப்பு மக்களும் இப்போது இருக்கிறார்கள். கொரோனாவை ஒழிக்க வேண்டும், அதே நேரத்தில் வறுமையையும் துரத்த வேண்டும் என்ற நிலையில், கையில் இருந்த சேமிப்பும் கரைந்து விட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து 50 சதவீதம் தொடங்கியுள்ளது. தொழிற்சாலைகளும் பல்வேறு விதிமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளது. சிறு தொழில் செய்வோரும், பெரும் தொழில் நிறுவனங்களும் வழக்கமான பணிகளை தொடங்கியுள்ளனர். ஆனாலும் 3 மாதங்களுக்கு முன்பிருந்த இயல்புநிலையும், எழுச்சியான வர்த்தகமும், பணிகளுக்கான ஊதியமும் எப்போதும் போல் கிடைக்கிறதா? என்றால் அதற்கான விடை கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் வாழ்வாதாரம் இழந்த ஏழைத்தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தினர் கந்துவட்டி கும்பலிடம் கையேந்தி நிற்கின்றனர். இது எதிர்காலத்தில் பெரும் அசம்பாவிதங்களுக்கு வழிவகுத்து விடும் என்ற அச்சம் ஒரு பக்கம் இருக்கிறது. எப்போதும் போல் இவர்களின் கையில் பணப்புழக்கம் வருவதற்கு மேலும் பல மாதமாகும். எனவே கடன் கொடுத்தால் திரும்ப வசூலிப்பது சிரமம் என்ற மனநிலையில் கந்துவட்டிக்காரர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்,பெரும்பாலான நடுத்தர குடும்பங்கள் ‘வங்கிகளில் நகைக்கடன்’ என்ற புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் நகைக்கடன் கேட்டு மொய்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து மூத்த வங்கி அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என்று 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இதில் பெரும்பாலான வங்கிகளில் தங்க நகைக்கு அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் துறை வங்கிகள் 8.50சதவீதம் முதல் 12 சதவீதம் வரையிலான ஆண்டு வட்டியில் தங்க நகை அடமானக்கடன் வழங்குகிறது. ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள் 12 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கிறது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் டிஎன்எஸ்சி என்னும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் 9சதவீத வட்டியிலும், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் 11 சதவீத வட்டியிலும் நகைக்கடன் வழங்குகின்றன.

ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப செலவுகளை தவிர்க்க பெரும்பாலானோர், தற்போது நகைக்கடன் கேட்டு வங்கிகளை மொய்க்க ஆரம்பித்துள்ளனர். இப்படி வருபவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் 1பவுன் முதல் அதிகபட்சமாக 5 பவுன் வரை அடமானம் வைத்து கடன் கேட்கின்றனர். அனைத்து வங்கிகளும் சராசரியாக ஒரு கிராம் தங்கத்திற்கு ₹3ஆயிரம் என்ற வகையில் அடமானக் கடன் நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது. கடந்த ஏப்ரல்,மே மாதங்களில் மட்டும் எங்களது ஆய்வுப்படி, வங்கிகளில் நகைக்கடன் கேட்டு வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு மூத்த வங்கி அதிகாரிகள் கூறினர்.

அதிகவட்டி வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள்
‘‘ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப செலவுகளை சமாளிக்க, பலரும் வங்கிகளில் நகைக்கடனுக்கு காத்திருக்கின்றனர். இதில் 9சதவீத வட்டிக்கு கடன்  பெறலாம் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் கடன் பெறுவதற்கு ஏற்கனவே உறுப்பினராக இருக்க  வேண்டும், சிபாரிசு வேண்டும், டெபாசிட் செலுத்த வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் இருப்பதால் அதிருப்தியடைகின்றனர். இதன் காரணமாக தனியார் நகை அடகு நிறுவனங்களை நாடுகின்றனர். அவர்கள், சூழலை தங்களுக்கு சாதகமாக்கி 15முதல் 25சதவீத வட்டிக்கு நகை அடகு கடன் வழங்குகின்றனர். இதிலிருந்து மக்களை காப்பாற்ற, அனைத்து வங்கிகளும் விதிமுறைகளை தளர்த்தி, குறைந்த வட்டிக்கு கடன் வழங்க வேண்டும்,’’ என்பதும் மக்களின் குமுறல்.

கூட்டுறவு வங்கிகளில்
ஒரு கிராமுக்கு  ₹3,300-கொரோனா ஊரடங்கு எதிரொலியாக குறைந்த வட்டி விகிதத்தில் சிறப்பு நகை கடன் திட்டத்தை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் தங்க நகைக்கு குறைந்தபட்சம் ₹25ஆயிரமும், அதிகபட்சமாக ₹1லட்சமும் கடன் பெறலாம். ஒரு கிராம் தங்கத்திற்கு ₹3,300 வழங்கப்படும். இதற்கு ஆண்டு வட்டி 6சதவீதமாகும். அதாவது ₹1,000க்கு மாதவட்டியாக ₹5 செலுத்த வேண்டும். இந்த திட்டமானது தமிழகத்தில் உள்ள 47 கிளைகளிலும் எளிய, நடுத்தர மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்கின்றனர் அதிகாரிகள்

விவசாயிகளை போல் சலுகைகள் வேண்டும்
‘‘கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் 7சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதை ஓராண்டு காலத்திற்குள் கட்டினால், வட்டி செலுத்த தேவையில்லை. இதே போல் தற்போது கொரோனாவால் தத்தளிக்கும் மக்களுக்கும் சலுகைகள்  அறிவித்து நகைக்கடன் வழங்க வேண்டும். இதனால் நகையை அவர்கள் உரிய நேரத்தில் மீட்பதோடு, வட்டி கட்ட வேண்டிய அவசியமும் இருக்காது,’’ என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

Tags : banks ,families ,households , Middle-class , debt-raising banks, 30 percent,than usual
× RELATED வங்கிகளில் அடகு வைக்கப்படும்...