×

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே உயிருக்கு பயந்து போலி டாக்டர்களிடம் சென்று பலியாகும் அப்பாவி மக்கள்

* கைது நடவடிக்கையால் பயனில்லை  
* சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தல்

வேலூர்: கைதானாலும் விரைவில் விடுதலையாகி தொழிலை கனஜோராக நடத்தும் போலி டாக்டர்களை நம்பி பலியாகும் அப்பாவி மக்களை காப்பாற்ற சட்டத்தை கடுமையாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் தனியார், அரசு கல்லூரி வளாகங்கள் மருத்துவமனைகளாக தற்காலிகமாக தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டுள்ளன. இத்தகைய நெருக்கடியான சூழலில் மத்திய, மாநில அரசுகள் சமூக பரவல் இல்லை என்று மறுத்தாலும், உண்மை நிலவரம் அதுவல்ல என்பது தினமும் வெளியாகும் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தி வருகின்றன.இந்த நிலையில்தான் சிறு காய்ச்சல் வந்தால் கூட கொரோனாவாக இருக்குமோ என்று உயிருக்கு பயந்து செல்லும் ஏழை அப்பாவிகளுக்கு போலி டாக்டர்கள் கொரோனா சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டம் முழுவதுமே 75க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கிளினிக்குகள் நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் நடமாட்டம் இருப்பதாக கூறுகின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருக்கலாம் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். ஏற்கனவே கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் தொடர்பாக வந்த புகார்களின் பேரில் கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட 35 குழுக்கள் 50 மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு 30க்கும் மேற்பட்ட போலி டாக்டர்களை கைது செய்தனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் 20க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வரக்கூடிய அளவிலேயே வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் அடுத்த 4 நாட்களில் சிறையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் தங்கள் ‘மருத்துவ’ சேவையை தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் நடமாடி வருவதாகவும், இவர்கள் தற்போது கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு கூட சிகிச்சை அளித்து வருவதாகவும், அதனால் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. வேலூர் அடுத்த பென்னாத்தூரில் வியாபாரி ஒருவர் காய்ச்சலுடன் அங்குள்ள போலி டாக்டரிடம் சென்று குளுக்கோஸ் ஏற்றி திரும்பிய நிலையில் உடல்நிலை மோசமாகி அதன் பின்னரே வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். ஆனால் இதுவரை அந்த போலி டாக்டர் மீது நடவடிக்கை இல்லை. அதேநேரத்தில் அதே பென்னாத்தூரில் மற்றொரு போலி டாக்டரும் தொடர்ந்து கிளினிக்கை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் தானிப்பாடி உட்பட பல இடங்களில் சமீபத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த 5க்கும் மேற்பட்டவர்கள் பிடிபட்டுள்ளனர்.
இதுபோன்ற புகார்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கொேரானா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதனால் ஏற்படும் மரணவிகித அதிகரிப்புக்கு காரணமாகும் போலி டாக்டர்கள் மீது மரணத்தை ஏற்படுத்தும் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் போலி டாக்டர்களின் அட்டகாசத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

போலி டாக்டர்கள் யார்?
மருத்துவமே படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராக பணிபுரிந்து, அந்த அனுபவ அடிப்படையில் மருத்துவம் பார்ப்பவர்கள். `பாராமெடிக்கல்’ என்னும் மருத்துவம் சார்ந்த பணிகளை செய்யும் நர்ஸ்கள், ஆயாக்கள், மருந்தாளுனர்கள், அலோபதி மற்றும் மாற்று மருத்துவ முறை எதுவும் பயிலாமல், அனுமதி பெறாத நிறுவனங்களில் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ படித்து சான்றிதழ் பெற்றுவிட்டு, தானும் ஒரு மருத்துவர் என்று சிகிச்சை அளிப்பவர்களும் போலி டாக்டர்கள்.

போலி டாக்டர்களால் ஏற்படும் விளைவுகள்
போலி மருத்துவர்களுக்கு மருத்துவத்தின் அடிப்படைகளான உடல் கூறியல், உடல் செயலியல், உயிர் வேதியியல், மருந்தியல், நோய்க்குறியியல், நுண்ணுயிரியல் குறித்து முழுமையாக தெரியாது. அத்துடன் மருத்துவ அறிவியல் படிப்புகளின் அடிப்படைகளும் அவர்களுக்குத் தெரியாது. இவை எதுவும் தெரியாமல் அனுபவ அடிப்படையில் மட்டுமே மருத்துவம் செய்வதால் நோயாளிகளின் உடல்நிலை பாதிப்புடன் மரணமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் நடமாடுவதாக தகவல் வெளியானதை அடுத்து இதுபற்றி விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து நடத்திய விசாரணை முடிவில் நோட்டீஸ் வழங்கியது. அதில் போலி டாக்டர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : doctors , Amidst,corona threat, innocent people , fake doctors for life
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை