×

அரியமங்கலத்தில் 40 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய படிப்பகம் இடிந்து விழும் அபாயம்: மாநகராட்சி அலட்சியம்

திருச்சி: திருச்சி உள் அரியமங்கலம் மந்தை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இலவச கட்டிடத்தில் 70 வருடமாக படிப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இப் படிப்பகத்தில் 40 ஆயிரம் வகையான புத்தகங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இப்படிப்பகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்பகுதி கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்த படிப்பகத்தில் புத்தகங்களை எடுத்துப் படித்து வருகிறார்கள்.
தற்போது இந்த படிப்பகம் சுற்றியுள்ள பகுதியில் சில சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை தூக்கி வீசுவதும், உடைப்பதும், சிலர் மலம் கழிப்பதும், குப்பைகளை கொட்டுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

படிப்பகத்தின் பின்புறத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் படிப்பகத்தின் சுவர் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. சாக்கடை கழிவு நீரால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தொற்று வியாதிகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக பதில் கூறுகின்றனர் எனவும் குற்றம் சாட்டினர். விரைந்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை ஒன்று திரட்டி அரியமங்கலத்தில் உள்ள மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட போவதாகவும் தெரிவித்தனர்.

Tags : Ariyamangalam: Corporation , Risk , collapsing 40,000 books, Ariyamangalam: Corporation, negligence
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு