×

நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று: அலுவலகம் மூடப்படாததால் ஊழியர்கள் பீதி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் அலுவலகம் மூடப்படாமல் இயங்கி வருவதால், ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பீதியில் உள்ளனர். திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். மேலும் துப்புரவு பணியாளர்கள் கையெழுத்திடவும் வருகின்றனர்.
இங்கு நகராட்சி ஆணையாளராக அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த 52 வயது நபர் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த 19ம் தேதி வரை அலுவலகம் வந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து,அவர் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து, அவர் பணியாற்றிய திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் நேற்று வெளியேற்றப்பட்டனர்.
 அங்கு பணிகள் எதுவும் நேற்று நடைபெறவில்லை. ஆனால், கிருமிநாசினி மட்டும் தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்படாமல் திறந்து கிடந்தது. இதனால் ஊழியர்கள் பீதியடைந்தனர். எனவே சமூக பரவலால் தொற்று ஏற்படாமல் தடுக்க, திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தை மூடவும், ஊழியர்கள் அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் 128 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சில ஒன்றியங்கள் என 128 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, 128 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2534 ஆக உயர்ந்துள்ளது. இதில், 37 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதுவரை, 1240 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்ற 1257 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.


Tags : Corona ,commissioner ,office , Municipal Commissioner, Corona, Office, Staff
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...