×

மாமல்லபுரம் கடற்கரையில் 230 கோடி போதை பொருட்கள் பறிமுதல்: மீனவர்களிடம் போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கடற்கரையில் இரும்பு டிரம்மில் அடைக்கப்பட்டிருந்த 203 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது. இது குறித்து போலீசார் மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று முன்தினம் சீலிடப்பட்ட தகரம் ஒன்று கரை ஒதுங்கியது. அங்கிருந்த மீனவர்கள் அதை உடைத்து பார்த்துள்ளனர். அதனுள் 78 பாக்கெட்டுகள் இருந்தன. இதுகுறித்து அவர்கள் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, உடனடியாக கடலோர காவல் படை போலீஸ் எஸ்பி சின்னசாமி, போதைப்பொருள் தடுப்பு எஸ்பி கலைச்செல்வன், ரியாசுதீன், மாமல்லபுரம் டிஎஸ்பி சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் முனியசாமி, காஞ்சிபுரம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய டிரம்மில் இருந்த 78 பொட்டலங்களை கைப்பற்றினர்.

 அந்த பாக்கெட் மேல் ரீபைன்ட் சைனீஸ் டீ என சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தை பிரித்து சோதனை செய்தபோது அது போதை பொருளாக இருக்கும் என சந்தேகம் அடைந்த கடலோர காவல் படை போலீசார் 78 பாக்கெட்டுகளையும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி விசாரணை செய்தனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அது ஹெராயின் வகையைச் சேர்ந்த மெத்தாம்பிடைமின் என்ற ஒரு வகை போதை பொருள் என்பது தெரிந்தது. இதை தண்ணீரில் கலந்தும், ஊசி மூலமாக உடலில் செலுத்தியும், பவுடராக்கி சுவாசிப்பது மூலமாக போதை ஏற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.  78 கிலோ மதிப்புள்ள இந்த போதை பொருட்களின் சந்தை மதிப்பு ₹230 கோடி என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் வருவதற்குள் டிரம்மை உடைத்து பார்த்த சில மீனவர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் அழைத்து விசாரித்தனர். அதற்கு மீனவர்கள் டீசல் அல்லது பெட்ரோல் நிரப்பப்பட்ட டிரம் என நினைத்து அதை உடைத்து பார்த்ததாக தெரிவித்தனர்.  மேலும் மர்ம நபர்கள் யாராவது படகில் கடத்தி வந்து இந்த போதைப் பொருட்களை வீசிவிட்டு சென்றனரா என்ற சந்தேகத்தில் மர்ம நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா என அந்த கடற்கரை பகுதியில் தீவிரமாக ஆய்வு செய்தனர். மேலும் செங்கல்பட்டு போலீஸ் எஸ்பி கண்ணன், போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்பி கலைச்செல்வன், கோவளம் கடலோர காவல்படை காவல் கண்காணிப்பாளர் சின்னசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இதன்பேரில் ஏடிஜிபி ஷகீல் சஹர் உத்தரவுப்படி, இந்த வழக்கை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரபாகர் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரணையை துவக்கி உள்ளார். யார் கடத்தினார்கள், யார் யாருக்கு தொடர்பு எங்கிருந்து இந்த போதைப்பொருள் செல்கிறது என தொடர் விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


Tags : Mamallapuram ,beach , Mamallapuram beach, drugs, fishermen, police
× RELATED கொரோனா காரணமாக மூடப்பட்ட மாமல்லபுரம்...