×

துணை வட்டாட்சியருக்கு கொரோனா: பூந்தமல்லி அலுவலகம் மூடல்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவள்ளூரை சேர்ந்த 44 வயது நபர் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். அதில், இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் உடன் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக வட்டாட்சியர் அலுவலகம் செயல்படும் என்று வட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் குன்றத்தூர் பெண் வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்துறையினர் கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

* சென்னையை சேர்ந்த 50 வயது நபர் கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. பூந்தமல்லி: போரூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 28 வயதுடைய எஸ்ஐக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஆலந்தூர்: பழவந்தாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நேற்று கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. அவரை ஐஐடி வளாகத்தில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதித்துள்ளனர். இதேபோல், பழவந்தாஙகல் பகுதியில் மேலும் 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பெரம்பூர்:செம்பியம் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ மற்றும் பெண் காவலர், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதிகளில் 4 பேர், பேசின் பிரிட்ஜ் பகுதியில் 11 வயது சிறுவன், ஓட்டேரி பட்டாளம் காவலர் குடியிருப்பில் தலைமை காவலர், அவரது மனைவி என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Tags : vice president ,Corona ,office closure ,Poonthamali , Deputy Regional Office, Corona, Poonthamalli Office
× RELATED கே.எம்.சி.எச். மருத்துவமனையில்...