×

திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் டன் கணக்கில் வீணாகும் காய்கறிகள்: குப்பையில் கொட்டும் அவலம்,வியாபாரிகள் வேதனை

சென்னை: திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்க ஆட்கள் இல்லாததால், தினமும் டன் கணக்கில் காய்கறிகள் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே, சேமிப்பு கிடங்கு வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு மார்க்கெட் கடந்த மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, அங்கு இயங்கி வந்த பூ, பழ மார்க்கெட்கள் கடந்த மே 11ம் தேதி மாதவரம் புதிய பஸ் நிலையத்திற்கும், காய்கறி மார்க்கெட் பூந்தமல்லி அடுத்த திருமழிசைக்கும் மாற்றப்பட்டது. இந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்டில், மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், தினசரி அங்கு வரும் சில்லறை வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

சீசன் நேரம் என்பதால், திருமழிசை மார்க்கெட்டுக்கு தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், வரத்திற்கு ஏற்ப விற்பனை இல்லை. இதனால் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. முள்ளங்கி, கேரட், கத்திரிக்காய், வெண்டைக்காய் என அனைத்து காய்கறிகளின் விலையும் குறைவாகவே இந்தபோதும், வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. திருவிழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாதது, பெரும்பாலான ஓட்டல்கள் செயல்படாதது போன்ற காரணங்களால் மொத்த வியாபாரிகளும் குறைந்த அளவில்தான் காய்கறிகளை வாங்குகிறார்கள். திருமழிசையில் கடை வைத்துள்ள வியாபாரிகள், டன் கணக்கான காய்கறிகளை தினமும் கீழே கொட்டிவிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து அங்குள்ள வியாபாரிகள் கூறுகையில், ‘‘திருமழிசை மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை. அதனால் வியாபாரம் பெருமளவு குறைந்துவிட்டது. மொத்த வியாபாரிகளில் பெரும்பாலானவர்கள் இங்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் முன்பு மாதிரி வாங்குவதில்லை.கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெறும் வியாபாரத்தில் பாதிகூட இங்கு இல்லை. தினமும் முள்ளங்கி, கேரட், பீன்ஸ், வெண்டைக்காய், கீரை வகைகள், புதினா என அனைத்தையும் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டிட்டு செல்லும் நிலை உள்ளது. சில்லறை வியாபாரிகளை அனுமதித்தால் கூட போதும்.

அவர்கள் மூலம் ஓரளவு விற்பனை நடைபெறும். முள்ளங்கி மூட்டை 100 ரூபாய்க்கு விற்றும் வாங்க ஆள் இல்ல. வெண்டைக்காய் மூட்டை 80 ரூபாய்க்கு விற்றும் வாங்க ஆள் இல்லை. இதனால் இந்த காய்கறிகளை குப்பையில் கொட்டும் நிலை உள்ளது. இதனால், வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.  இங்கு ஒரு குளிர்பதன கிடங்கு கூட இல்லை. இதனால், அடிக்கும் வெயிலில் நாங்கள் எங்கு காய்கறியை வைப்பது. இங்கு நடக்கும் வியாபாரத்தில் போட்ட அசல் எடுப்பதே கஷ்டமாக உள்ளது. எனவே, வியபாரிகளின் நிலையை கருத்தில் கொண்டு, இங்கு குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Tirumalasa ,traders , Tiramisai, Market, Merchants
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...