×

உணவு உற்பத்தியையே கேள்விக்குறியாக்கி விடும்: ஜி.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

ஏற்கனவே விவசாயம் பார்க்கக்கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தபடி உள்ளது. உலகத்திலேயே தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யமுடியாதவர்கள் என்றால் அது விவசாயிகள் தான். தொழில் நிறுவனங்கள் தாங்கள் தயார் செய்யும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது போல் விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விவசாயி விலை நிர்ணயம் செய்ய முடியாது. விவசாயி இதுபோன்று தன்னுடைய அடிப்படை உரிமையை விட்டுத்தருவதால் தான் அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மானியம் போன்றவற்றை வழங்குகிறார்கள். இந்தநிலையில், மத்திய அரசு கொண்டுவர உள்ள இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டால், வெறும் விவசாயத்தை மட்டும் பாதிக்காது. அது விவசாயத்தை சார்ந்த அனைத்தையும் கேள்விக்குறியாக்கி விடும். விவசாயி தாங்கள் விளைவிக்கும் பொருட்களை தாங்களே பயன்படுத்திக்கொள்வார்கள். இதுபோன்ற நிலை ஏற்பட்டால் என்னவாகும்?.
விவசாயிகள் தங்களுடைய அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அரசு அவர்களுக்கு பெரிய சலுகைகளை செய்யவில்லை. அதற்கு பதிலாக இலவச மின்சாரம் போன்ற சிறிய திட்டங்களை நன்றிக்கடனாக தான் வழங்குகிறோம். இதற்கும் மேலாக அவர்களுக்கு நிறைய நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டுவர வேண்டும். விவசாயிகளுக்கு சுலபமாக கடன் கிடைப்பது உள்ளிட்டவைகளுக்கு வழிவகை செய்ய வேண்டும். இதேபோல், இலவசமாக விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கும் போது அவர்கள் தண்ணீரை பெருமளவில் செலவழிப்பதாக ஒரு குற்றசாட்டு உள்ளது.

இது தவறான வாதம். விவசாயத்திற்கு எந்த நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என்று ஒரு வரையறை அளித்தால் அதற்கு ஏற்றார்போல் விவசாயிகள் மோட்டர் பயன்பாடு, தண்ணீர் பயன்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். அதற்கு பதிலாக இலவச மின்சாரம் வழங்குவதில் கூட விவசாயிகளை அலைக்கழிப்பதால் தான் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மோட்டர் பயன்பாட்டை அதிகமாக பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இலவச மின்சாரம் எந்தெந்த நேரத்தில் வழங்கப்படும் என்று வரையறை செய்து வழங்கினாலே எந்த பிரச்னையும் ஏற்படாது. இதற்கு மாறாக அரசு செயல்படுகிறது. இதேபோல், விவசாயிகள் மட்டும் இல்லாமல் விவசாயத்தை சார்ந்த, அதாவது நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாய பொருட்களின் விலை ஏறும் போது அதிக விலைக்கு காய்கறிகளையும், பழங்களையும் வாங்க வேண்டிய நிலைக்கு நுகர்வோர்கள் தள்ளப்படுவார்கள். இந்த திட்டம் நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தியையே கேள்விக்குறியாக்கும். அனைவரையும் பாதிக்கும் திட்டம்.  

பேரிடர் காலங்களில் 130 கோடி மக்களுக்கு சாப்பாடு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக தான் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். கார், பஸ், ரயில் இல்லாமல் நாம் இருந்துவிடலாம். ஆனால், உணவு இல்லாமல் நாம் இருக்க முடியாது. குறிப்பாக, இலவச மின்சாரம் வழங்குவது என்பது மாநில அரசின் கீழ் வரும் ஒரு விஷயம். அதில், மத்திய அரசு தலையிட முடியாது. யாருக்கு, எவ்வளவு இலவச மின்சாரம் தரலாம் என்பது மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மத்திய அரசு இதை முடிவு செய்ய முடியாது.  இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் போது விவசாயிகள் தாங்கள் விலைவிக்கும் பொருட்களை தாங்களே பயன்படுத்திக்கொள்வார்கள். விவசாயிகள் தங்களுக்குள்ளே பண்டமாற்று முறையை ஆரம்பிப்பார்கள். இதனால், விவசாயம் இல்லாத பிற தொழிலில் ஈடுபடும் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படும். மத்திய அரசின் இந்த திட்டம் இது போன்ற விளைவையே ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இலவச மின்சாரம் ரத்து செய்யும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டால், வெறும் விவசாயத்தை மட்டும் பாதிக்காது. அது விவசாயத்தை சார்ந்த அனைத்தையும் கேள்விக்குறியாக்கி விடும்.



Tags : G. Sundararajan ,Friends of the Earth , Questioning, food production, G. Sundararajan, Friends ,Earth
× RELATED என்.எல்.சி விவகாரம் தேசிய பசுமை...