×

எதிர்காலத்தில் விவசாயம் காட்சிப் பொருளாகி விடும்: எஸ்.ஆர்.கே.பாலு, ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட் சங்கத் தலைவர்

தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட் ஆகும். இந்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் மற்றும் பழங்கள் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, மகாராஷ்டிரா மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட காய்கறி மொத்த வியாபாரிகள் மற்றும் 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். இப்பகுதியில் விளைநிலங்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை தன்னுடைய பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பருவமழை பெய்யாததால் பெரும்பாலான விவசாயிகள் வேறு தொழிலை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டது. ஒருசில விவசாயிகள் விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாத நிலையிலும் இலவச மின்சாரம் வழங்குவதால் தான் தங்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் போர்வெல் அமைத்து நீர் எடுத்து அதன் மூலம் விவசாயம் செய்தும் வருகின்றனர். இச்சூழ்நிலையில் இலவச மின்சாரத்தை நிறுத்திவிட்டால் சிறு, குறு விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர்கள்.  இலவச மின்சாரம் இருக்கும் போதே விவசாய தொழில் செய்பவர்களுக்கு ஒன்றுமே மிச்சமில்லை. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பார்கள். அதன்பிறகு அவர்கள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான காய்கறிகளை மட்டும் விளைநிலங்களில் விளைவித்து பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஏற்கனவே வெளிமாநிலங்களிருந்து பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், முட்டைகோஸ் போன்றவைகள் தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அனைத்து காய்கறிகளையும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாரஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்த காலம் மாறி போய் அங்கிருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் போன்றவை இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் லாரி வாடகை, ஏற்றும் போது வேலை ஆட்கள் கூலி, இறக்கும் போது வேலை ஆட்கள் கூலி என்று பார்க்கும் போது வியாபாரிகள் கையில் இருந்து பணத்தை போட மாட்டார்கள் அப்படி பணம் போட்டாலும் போட்ட பணத்தை எடுப்பதற்காக வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்க கூடிய நிலை ஏற்படும். இலவச மின்சாரத்தை நிறுத்திவிட்டால் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு, அன்றாட தேவைகளுக்கு கூட அண்டை மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வருங்கால சந்ததியினர் விவசாயத்தை பாட புத்தகத்திலும், கண்காட்சிகளில் பார்த்து தெரிந்துகொள்ளும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை. எனவே இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்து மீட்டர் பொருத்தப்படும் பணியை ரத்து செய்ய அரசு பரிசீலனை செய்து விவசாய தொழில்களும் விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் எங்களை போன்று காய்கறி வியாபாரம் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும். வியாபாரிகள் விவசாயிகளை நம்பி தான் உள்ளனர். விவசாயிகள் உற்பத்தி திறன் குறைந்தால் காய்கறிகளின் தேவைகள் அதிகரிக்கும். ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர். மேலும் அனைத்து விவசாயிகளும் விவசாயம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்து விட்டால் நாம் அனைவருக்கும் தான் பாதிப்பு ஏற்படும். எனவே விவசாயிகளுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். விவசாயத்தை விவசாயிகள் மட்டும் அழியாமல் பார்த்துக் கொண்டால் போதாது. அதனை சார்ந்துள்ள அனைவருக்கும் அந்த பொறுப்பு உள்ளது.

இலவச மின்சாரத்தை நிறுத்திவிட்டால் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்பட்டு, அன்றாட தேவைகளுக்கு கூட அண்டை மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.



Tags : SRK Baloo ,Ottansaparam Kamarajar Market Association ,President , Agriculture , visual commodity , future, SRK Baloo, Ottansaparam, Kamarajar Market Association President
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...