×

கோரத்தாண்டவம் உச்சத்தை தொடுமா? உ.பி., பீகார் கைகளில் இந்தியாவின் தலைவிதி: அமெரிக்க நிபுணர் திகில் அறிக்கை

நியூயார்க்: உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பதே, இந்தியாவில் கொரோனா உச்சமடைந்ததன் அறிகுறி என்றும், இன்னும் ஓராண்டுக்கு இந்த வைரசுக்கு எதிராக நாம் போராட வேண்டுமெனவும் அமெரிக்க நிபுணர் கூறி உள்ளார்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் மெல்ல மெல்ல வேகமெடுக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அமெரிக்காவின் ஹார்வர்டு குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் இயக்குநர் டாக்டர் ஆஷிஷ் ஜா பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறி உள்ளார். அவர் கூறியுள்ள புள்ளி விவரங்கள்:
* சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் புதிதாக பாதிப்போர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது கவலை தரும் விஷயமாகும்.
* இன்னும் உபி, பீகார் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில் கொரோனா பெரிய அளவில் பாதிக்கவில்லை. அங்கு பாதிப்பு வெடிக்கும் போது மோசமான தாக்கத்தை காண முடியும். பலியும், பாதிப்பும் உச்சகட்டத்தை எட்டுமா என்பது இந்த மாநிலங்களின் கைகளில்தான் உள்ளது.
* கடந்த சில நாட்களாக நாள்தோறும் 10,000க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக இருக்கும். பலியும் அதிகரிக்கும்.
* புள்ளி விவரங்கள் சொல்வதை விட இந்தியாவில் பாதிப்புகள் அதிகமிருக்கும். லேசான அறிகுறி இருப்பவர்களிடம் பரிசோதனை செய்யப்படுவதில்லை. இதனால் பலரும் கொரோனாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
* யுவாங் கு கோவிட்-19 மாடல் கணிப்புகளை பொறுத்த வரை, இந்தியாவில் வரும் அக்டோபர் 1ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 2.75 கோடியாகவும், பலி எண்ணிக்கை 1.25 லட்சமாகவும் இருக்கும்.
* பாதிப்பும், பலியும் உச்சத்தை எட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நாம் இன்னும் குறைந்தபட்சம் 12 மாதத்திற்கோ அதற்கும் அதிக காலமோ கொரோனாவுடன் போராட வேண்டி இருக்கலாம். எனவே, நீண்ட காலத்திற்கு வைரசை கட்டுப்படுத்துவதற்கான விரிவான திட்டம் அவசியம் தேவை.
* இந்தியா கொரோனா பிடியிலிருந்து எப்போது முழுமையாக விடுபடும் என்பதை இப்போது கணிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கு சரியா?
தேசிய ஊரடங்கு குறித்து நிபுணர் ஆஷிஷ் ஜா கூறுகையில், ‘‘மார்ச் மாதமே தேசிய ஊரடங்கு விதித்தது சரியான நடவடிக்கை. ஆனாலும், இது நிலையான தீர்வல்ல. ஊரடங்கு என்பது காலத்தை தள்ளிப்போடுவது. ஊரடங்கு காலத்தை நாம் எந்தளவுக்கு பயன்படுத்திக் கொண்டோம் என்பதுதான் முக்கியம். அதில், நோய் தடுப்புக்கான அடித்தளத்தை பலமாக அமைக்க வேண்டும்,’’ என்றார்.


Tags : US ,India ,Bihar ,UP , Coroutandam, Uttar Pradesh, Bihar, India, US expert
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!