×

ராணுவ வீரர்களின் உயிரை வைத்து அரசியல் செய்வதா?: பிரதமருக்கு கமல் கேள்வி

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தோ-சீனா கல்வான் பள்ளத்தாக்கில் நிலவும் பதட்டம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. தெளிவான சிந்தனை தேவைப்படும்போது எல்லாம் உணர்வுகளை தூண்டிவிட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், அவரது சகாக்களும் நிறுத்த வேண்டும். இது ஒருமுறை அல்ல, கடந்த 6 ஆண்டுகளில் எந்தவொரு கேள்விக்கும் சரியான பதில் அளிக்காமல், உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள். ஒவ்வொருமுறையும் கேள்வி கேட்பவர்களை தேசத்துக்கே விரோதியை போல் ஒரு பிம்பத்தை கட்டமைத்து இருக்கிறீர்கள். ஆனால், அது ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை மறந்துவிடாதீர்கள்.

எதிலும் மக்களின் நன்மைக்கான திட்டம் இல்லாமல், உணர்வுகளை தூண்டும் உங்கள் பேச்சுதான் இந்நிலையிலும் நடக்கிறது. கேள்வி கேட்பவர்கள், வீரர்களின் மன உறுதியை குறைப்பதற்காக கேட்கவில்லை. வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கேட்கிறேன். இந்த அரசு எல்லையில் நிலவும் பதட்டத்தை தணிக்க என்ன செய்யப்போகிறது? வீரர்களை சந்தேகப்படாதீர்கள் என்ற பதில் எங்களுக்கு தேவையில்லை. இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தீரத்தையும் நன்கு அறிந்தவர்கள் நாங்கள். ஆனால், அவர்கள் உயிரை வைத்து நீங்கள் அரசியல் விளையாடாமல் பாதுகாக்கவே இந்த கேள்விகளை கேட்கிறேன்.

இதுவரை இந்திய பிரதமர் யாரும் செல்லாத அளவுக்கு அதிகமுறை சீனாவுக்கு சென்று வந்தீர்களே. அப்படி இருந்தும் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க உங்களால் ஏன் முடியவில்லை? கடந்த ஆண்டு சீனா அதிபரை இந்தியாவுக்கு வரவழைத்து, நட்புறவை வளர்க்க பேச்சுவார்த்தை நடத்தினீர்களே. அது எதுவும் உதவவில்லையா? நட்புறவை வளர்க்க எல்லா நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், உங்களது முயற்சி தோல்விதானா? பேச்சுவார்த்தை மூலமாகவோ, நட்புறவு மூலமாக நீங்கள் செய்ய வேண்டியதை, இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து, செய்து வருகிறார்கள். அவர்கள் உயிரை பாதுகாக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறேன்.


Tags : Kamal ,soldiers , Army, Life, Politics ?, Prime Minister, Kamal Question
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...