×

வுகான் வைரஸ் போயாச்சு இனி கொரோனாவின் புதிய பெயர் ‘குங் புளு’: சீனாவை மீண்டும் சீண்டிய டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனா வைரசால் ஏற்படும் ‘கோவிட் -19’ என்ற நோய்க்கு, சீனாவை சீண்டும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘குங் புளு’ என்று புதிய பெயரை சூட்டியுள்ளார். சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை 4.5 லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. 85 லட்சம் பேரை பாதித்துள்ளது. இதில் பெரியளவில் பாதிக்கப்பட்டு இருப்பது அமெரிக்காதான். கொரோனா பாதிப்பிலும், சாவிலும் உலகளவில் முதலிடம் வகிக்கும் இந்நாட்டில், இதுவரை 22 லட்சம் பேர் பாதித்துள்ளனர். 1.20 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதோடு, அமெரிக்காவின் பொருளாதாரமும் சீரழிந்துள்ளது.

இதனால், சீனாவின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த வைரஸ் பரவியதை உலக சுகாதார அமைப்புடன் கைகோர்த்து மறைத்து விட்டதால்தான், உலகம் இந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக சீனாவின் மீது அவர் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், உலக நாடுகளுடன் சேர்ந்து அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் துடித்து வருகிறார். அதற்கான, வாய்ப்புக்கு காத்திருக்கிறார்.கொரோனா வைரசால் பரவும் நோய்க்கு, ‘கோவிட் -19’ என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. அதே நேரம், சீனாவை அடிக்கடி சீண்டும் வகையில் இந்த வைரசுக்கு அமெரிக்கா புதுப்புது பெயர்களை சூட்டி, தனது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகமே இந்த வைரசை, ‘கொரோனா வைரஸ்’ என்று அழைத்து வரும்  நிலையில், அமெரிக்கா மட்டும் இதை ‘வுகான் வைரஸ்’ என்று அழைக்கிறது.

இந்நிலையில், இந்த வைரஸ் நோய்க்கு டிரம்ப் நேற்று முன்தினம் புதிய பெயரை சூட்டியுள்ளார். ஆக்லஹோமாவில் உள்ள துல்சாவில் நேற்று முன்தினம் நடந்த தனது பிரசார கூட்டத்தில், சீனாவையும் ஒருபிடி பிடித்தார். அவர் பேசுகையில், ‘‘கொரோனா வைரசுக்கு என்னாலும் 19-20 பெயர்களை சூட்ட முடியும். நிறைய பேர் இதை வைரஸ் என்கின்றனர். சிலர், இது புளு (காய்ச்சல்) என்கின்றனர். அது இரண்டுமே கிடையாது. இதற்கு நான் புதுப்பெயர் வைக்கிறேன். இனிமேல் அதன் பெயர் ‘குங் புளு’. அமெரிக்கா இனிமேல் இதை இப்படிதான் அழைக்கும்,’’ என்றார்.

பரிசோதனைகளை குறைக்க உத்தரவு
டிரம்ப் மேலும் பேசுகையில், ‘‘அமெரிக்காவில் இதுவரை 25 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால், நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பரிசோதனைகளை அதிகளவில் நடத்தினால், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தான் செய்யும். எனவே, பரிசோதனைகளை குறைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.’’ என்றார்.

சீனாவின் வீரக்கலை
சீனாவின் வீரக்கலையின் பெயர் குங்பூ. இது, உலகளவில் மிகவும் பிரபலம். இந்த கலையில் வெறும் கை, கால்களை பயன்படுத்தி சீனர்கள் சண்டை செய்வார்கள்.  இதை கிண்டலடிக்கும் வகையிலேயே, குங்பூ என்பதை சுருக்கி, ‘குங் புளு’ (குங்பூ காய்ச்சல்) என்று டிரம்ப் பெயர் சூட்டியுள்ளார்.

Tags : Wukan ,China ,Corona , Wukan Virus, Corona, China, Trump
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...