ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் வீட்டிற்குள் பதுங்கிய 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் நகரில் உள்ள ஜூனிமார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, வீரர்கள் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகள் பதுங்கிய வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது உள்ளே இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். தீவிரவாதிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்த வீரர்கள் அவர்களது பெற்றோரை வரவழைத்தனர். அவர்களை சரணடைந்து விடும்படி பெற்றோர் மன்றாடி, வேண்டுகோள் விடுத்தனர் ஆனால், சரணடைய தீவிரவாதிகள் மறுத்து விட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் அதிரடியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதில், இரண்டு பேர் கடந்த 2019ம் ஆண்டு முதல் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள். ஒரு தீவிரவாதி கடந்த மாதம் இரண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் தொடர்பு உடையவன். தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதிகளில் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படவில்லை.