×

சீனாவுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு சுதந்திரம்: ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் கடந்த 15ம் தேதி அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தியாவின் பதிலடியில் 35 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அதை சீனா மறைப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம், கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், மத்திய அரசு இதை நிராகரித்துள்ளது.

இதற்கிடையே, நாளை மறுநாள் மாஸ்கோவில் நடைபெறும், 2-ம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75ம் ஆண்டு விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இதில், சீன தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களுடன் எல்லை பிரச்னை குறித்து எந்த சந்திப்பும் நிகழாது என்று ராஜ்நாத் தெரிவித்தார். இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம். நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதவுரியா ஆகியோருடன் லடாக் எல்லை பிரச்னை பற்றி டெல்லியில் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதில், எல்லையில் இந்திய படைகளை தயார் நிலையில் நிறுத்தி வைக்கவும், சீனப் படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கும்படியும் ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இதில், லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Army ,China ,meeting ,Rajnath Singh , China, Army, Rajnath Singh
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ