×

அனைவரின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட கழகத்தினைக் கட்டிக்காக்கும் செயல்வீரராக- வடசென்னை மாவட்டத்தின் முன்னாள் செயலாளராக விளங்கிய பலராமன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி இதயத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி, கண்களை நனையச் செய்கிறது. இருவண்ணக் கொடி பிடித்துப் போராட்டக் களங்களில் பங்கேற்கும் தொண்டனாக, அதன்பிறகு வட்டச் செயலாளராக, அதிலிருந்து  பகுதிச் செயலாளராக ஏற்றம் பெற்று, வடசென்னை மாவட்டத்தின் செயலாளர் என்கிற பொறுப்பினைப் பெற்று, போற்றிப் பாராட்டத் தக்க வகையில், திறம்படச்  செயலாற்றியவர் பலராமன். வடசென்னை மாவட்ட திமுக சார்பில் தலைவர் கலைஞர் பங்கேற்கிற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டமாக இருந்தாலும், இனமானப்  பேராசிரியர் பிறந்தநாள் பொதுக்கூட்டமாக இருந்தாலும் அவற்றை எழுச்சியுடனும் ஏற்றத்துடனும் நடத்திக் காட்டுவதில் பலராமனுக்கு நிகர் பலராமன் தான். அதனால் தான், தலைவர் கலைஞர் அவரை ‘பலே’ராமன் என்று மேடையிலேயே பாராட்டி மகிழ்ந்தார்.

அவருடைய வடசென்னை  மாவட்டக்  கழகத்திற்குட்பட்டதாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதி இருந்த நிலையில், அங்கே 1989, 1991 ஆகிய இரு தேர்தல்களிலும் போட்டியிட்ட தலைவர் கலைஞரை வெற்றி பெறச் செய்யும் அளப்பரிய உழைப்பைக் கொட்டியவர் பலராமன். அதிலும், 1991 தேர்தல் என்பது,  ராஜிவ் காந்தியின் படுகொலையால் முடிவுகளை முற்றிலும் மாற்றிய தேர்தல். அந்தச் சூறாவளியிலும் துறைமுகம் தொகுதியில் தலைவர் கலைஞர் பெற்ற வெற்றிக்கு பலராமனின் அயராத  உழைப்பும், துணிவான களப்பணியும் முக்கிய காரணமாகும். 1996, 2001, 2006 தேர்தல் களங்களில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார். 1996  சட்டமன்றத்  தேர்தலில் பேராசிரியர் பெருந்தகையை எதிர்த்து நின்ற அத்தனை  வேட்பாளர்களும் டெபாசிட்  இழக்கும் வகையில் பெரும் வெற்றியை ஈட்டித்  தந்தவர் பலராமன். தலைவர், பொதுச்செயலாளர் எனும் இரண்டு கோபுரங்களில் வெற்றிக் கலசம் மின்னுகிற வகையில், தாங்கி நின்ற பலம் மிகுந்த தூணாகிய பலராமன் நம்மை  விட்டுப் பிரிந்துவிட்டாரே என்கிற வேதனை உங்களில் ஒருவனான எனக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு உடன்பிறப்புகளிடம் கனிவாகவும், கறாராகவும் நடந்து கொண்டவர் பலராமன்.

திமுகவின் துணிவு மிக்க போராளியாக விளங்கிய பலராமன் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்  நலிவுற்றிருந்தாலும், இந்தக் கொரோனா காலத்தில் கோவிட்-19  தொற்றுக்குள்ளாகி மறைவெய்தியிருப்பது நமக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. 10 நாட்களுக்கு முன்னர்தான் ஜெ.அன்பழகனை நோய்த்  தொற்றுக்குப் பறி கொடுத்தோம். அந்தத்  துயரத்திலிருந்து மீள்வதற்கு முன்பாக, ஆற்றலாளர் பலராமனை இழந்திருக்கிறோம். இழப்புகள், சோதனைகள், நெருக்கடிகள் எனக் கழக வரலாற்றில் காயங்களைப் பெற்றே இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அப்படி வருவதற்குத் துணை நின்ற தூண்களில் ஒருவரான பலராமனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் கழகத்தினருக்கும்
ஆறுதலையும் இரங்கலையும் தெரிவிப்பதன் மூலம்  உங்களில் ஒருவனான நான், என்னை நானே தேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன். இயற்கையின் சதியால் பலராமன்  இறந்துவிட்டார் என்றாலும் அவர் நம்மிடமிருந்து மறையவில்லை. நம் அனைவரின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்; திமுக  வரலாற்றில் நிலைத்திருக்கிறார். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பலம் மிகுந்த தூணாகிய பலராமன் நம்மை  விட்டுப் பிரிந்துவிட்டாரே என்கிற வேதனை உங்களில் ஒருவனான எனக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு தொண்டருக்கும் ஏற்பட்டுள்ளது.


Tags : MK Stalin ,volunteers , MK Stalin's, letter, volunteers
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...