×

புதுகைக்கு காவிரி நீர் வந்த 2வது நாளில் கல்லணை கால்வாய் உடைப்பு

* தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தம்
* சீரமைப்பு பணிகள் தீவிரம்

அறந்தாங்கி: பாசனத்திற்காக திறக்கப்பட்ட காவிரி நீர் புதுக்கோட்டைக்கு வந்த 2வது நாளில், கல்லணை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட பாசனத்திற்காக முதலில் 500 கன அடியும், அதனைத்தொடர்ந்து 1500 கனஅடியும் திறக்கப்பட்டது. கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட காவிரி நீரை முதலில் கடைமடைப்பகுதி வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிளை வாய்க்கால்களை திறக்காமல் மெயின் வாய்க்கால் மூலம் கொண்டு சென்றனர். கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட காவிரிநீர் நேற்றுமுன்தினம் காலை புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பகுதியை வந்தடைந்தது. இதில் கடைமடை பகுதியான நாகுடிக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தது.

அப்போது அதிகாலை 3 மணியளவில் கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி கிழக்கு பகுதியில் கல்லணை கால்வாயில் திடீரென்று உடைப்பெடுத்து நீர் வெளியேறியது.
தகவல் அறிந்த பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கால்வாயின் ஒரு கரையில் உடைப்பு ஏற்பட்டதால், புதுக்கோட்டைக்கு வந்த காவிரி நீரை நிறுத்திவிட்டு, தஞ்சைக்கு செல்லும் கிளை வாய்க்கால்களில் திறந்து விட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டைக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. கல்லணைக் கால்வாயின் கரையில் 12 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால் வேம்பங்குடி கிழக்கு பகுதியில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கியது. புதுக்கோட்டை மாவட்ட பாசனத்திற்காக கல்லணை கால்வாயில் தண்ணீர் வந்த 2வது நாளிலேயே கரையில் உடைப்பு ஏற்பட்டதாலும், தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.

அடிக்கடி உடைப்பு ஏற்படுவது ஏன்?
கல்லணை கால்வாயில் கடந்த ஆண்டு பாசனத்திற்காக திறக்கப்பட்ட சில நாட்களில் தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டையிலும், சில நாட்கள் கழித்து ராஜாமடம் வாய்க்காலில் ஒரத்தநாடு அருகிலும் கால்வாயின் கரைகளில் உடைப்பெடுத்தது. இதனால் கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாசனத்திற்கு முறையாக தண்ணீர் வந்து சேரவில்லை. இந்நிலையில் நேற்றும் வேம்பங்குடிகிழக்கு பகுதியில் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. முறையாக பராமரிக்கப்படாததே ஆண்டுதோறும் கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Tags : Kallani Canal ,Cauvery , Kallani ,breaks down, 2nd day , Cauvery water
× RELATED தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர்...