×

தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து திரும்பும் மக்களுக்கு ரூ.1000 வழங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு

* தன்னார்வலர்களுக்கு தினசரி ₹520 ஊதியம்
* தமிழக அரசு உத்தரவு

சென்னை: தனிமைப்படுத்தும் முகாம்களில் இருந்து வீடு திரும்பும் பொதுமக்களுக்கு ₹1000 நிவாரணம் வழங்க ₹60 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தனிமைப்படுத்துதல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதனால் ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை தொடர்ந்து, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் ெகாண்டு அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும் போது தலா ₹1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். அதன்பேரில், தற்போது ₹60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் வீதம் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மாதத்தில் 60 ஆயிரம் பேர் வரை தனிமைப்படுத்துதல் முகாம்களில் வைக்கப்படுகின்றனர். அந்த 60 ஆயிரம் பேருக்கு தலா ₹1000 நிவாரணம் வழங்க ₹60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இல்லங்களுக்கு உதவி செய்ய 6720 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினமும் ₹520 வீதம்  ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக, ₹40.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 68 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 680 தன்னார்வலர்களுக்கு தினமும் ₹500 தினசரி ஊதியமாக வழங்க ₹1.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தன்னார்வலர் ஒருவருக்கு 10 வீடுகள் வீதம் பாசிட்டிவ் நோயாளிகள் உள்ள வீடுகளை 14 நாட்களும் தினசரி சென்று ஆய்வு செய்வார்கள். அதேபோன்று தனிமைப்படுத்தப்படும் நபர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்கின்றனர்.  இந்த பணிகளுக்கான நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விடுவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : isolation camp ,Iso , ₹ 60 crores , provide Rs.1000 , people returning ,isolation camp
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு