×

புதுவையில் நாளை முதல் 10 நாட்களுக்கு கடைகள், மதுக்கடைகள் மதியம் 2 மணி வரை இயங்கும்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி பேரிடர் மீட்பு துறை மூலமாக கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 3 மணி நேரம் நடந்தது. புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றரை மாதம் வரை 3 பேராக இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து இப்போது 218 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசானது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் முழுஊரடங்கு அறிவித்த பிறகு அந்த பகுதிகளில் இருந்து நிறைய பேர் புதுச்சேரிக்குள் நுழைய ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இக்கூட்டத்தில் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உறவினர் வீட்டுக்கு யார் வந்தாலும், அக்கம் பக்கத்து வீட்டினர் இதுபற்றி வருவாய், காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது, தினமும் 300 பேருக்கு கொரோனோ பரிசோதனை செய்ய வசதியுள்ளது. அதேபோல், ஜிப்மரில் 300 பேருக்கு பரிசோதிக்க வசதியிருக்கிறது. இதனை உயர்த்தி, அதிகப்படியான பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 3 ஷிப்டுகளாக வேலை செய்ய வேண்டும். அதேபோல் ஜிப்மரில் சுமார் 1000 பேருக்கு பரிசோதனை செய்யும் அளவில் திறனை உயர்த்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்த நேரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

 இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜிப்மரிலும் தலா 300 படுக்கைகள் இருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவர்களும் தனியாக படுக்கைகளை ஒதுக்கி தர வேண்டும். கொரோனா தொற்று பரவுவதற்கு காரணம் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தது தான். ஒருசிலர் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு இப்போது ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அது இனி ரூ.200 ஆக உயர்த்தப்படும்.  கடலூர், விழுப்புரம் பகுதியில் இருப்பதுபோல், புதுச்சேரி மாநிலத்திலும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் திறந்திருக்கும். பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இருக்கும். பால் பூத்கள் மாலை 6 மணி வரை இருக்கும். உணவகங்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். அதன்பிறகு இரவு 9 மணி வரை பார்சல்கள் வாங்கி செல்லலாம்.  கடற்கரை சாலை 10 நாட்கள் மூடப்படும். தொழிற்சாலைகள் இயங்கும். தொழிலாளர்கள் சென்று வருவதற்கான தேவையான அனுமதி பாஸ் கொடுக்கப்படும்.

கட்டிட தொழிலாளர்கள் பணி செய்ய எந்த தடையும் இல்லை. விவசாயம், தொழிற்சாலை, கட்டுமான பணிகளுக்கு எந்த தடையும் கிடையாது. மதுக்கடைகளும் மதியம் 2 மணிக்குள் மூட வேண்டும். அனைத்து தொழில் வியாபாரம் செய்பவர்கள் 2 மணிக்கு கடையை மூடிவிட்டு 3 மணிக்குள் வீட்டுக்கு செல்வற்கான 1 மணி நேர இடைவெளியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் நாளை (செவ்வாய்) காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும். இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது கொரோனா பரவுவதால் புதுச்சேரி நகர, கிராமப் பகுதிகளில் மருத்துவம், வருவாய், காவல், உள்ளாட்சி துறைகளுடன் இணைந்து பணி செய்ய உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பல பகுதிகளை பிரித்து கொடுக்கப்படும். புதுச்சேரி மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எந்த நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரேஷன் கார்டு ஆய்வு பணி நிறுத்தி வைப்பு

குடிமை பொருள் துறையில் இருந்து ரேஷன் கார்டுகளை வீடு, வீடாக சென்று பரிசீலனை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீன்வளத்துறையிலும் குழுக்கள் அமைத்து, பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று அந்த பணியில் ஈடுபடும் போது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே குடிமை பொருள் துறையிலும், மீன்வளத்துறையிலும் குழுக்களை அமைத்து வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை கொரோனா முடியும் வரை நிறுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளோம். இந்த பணியெல்லாம் மக்களின் பாதுகாப்புக்காக, கொரோனா பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

சண்டே மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றப்படும்

சண்டே மார்க்கெட் பொறுத்தவரை சமூக இடைவெளி கடைபிடிக்காததால் கொரோனா சமயத்தில் திறக்க கூடாது என முடிவு செய்திருக்கிறோம். ஆனால் ஒருசிலர் அதற்காக போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை. சண்டே மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றுவது என முடிவு செய்திருக்கிறோம். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்போம்.


Tags : shops ,liquor shops ,CM Narayanasamy ,Stores , Stores , liquor outlets,2 pm to 2 pm tomorrow, CM Narayanasamy
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி