×

உலக கோப்பை டி20 ஒத்திவைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவேன்…: டேவிட் வார்னர் உறுதி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக உள்ள ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டால், ஐபிஎல் தொடரில் நிச்சயமாக விளையாடுவேன் என்று ஆஸி. நட்சத்திரம் டேவிட் வார்னர் கூறியுள்ளார். உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து முடக்கம், வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த தொடர் ஒத்திவைக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. இதில் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஐசிசி தரப்பு தடுமாறி வருகிறது. ஒருவேளை உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால், அந்த சமயத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஆஸி. அணி தொடக்க வீரர் வார்னர் கூறியதாவது: சொந்த மண்ணில் உலக கோப்பையில் விளையாடுவதை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் உலக கோப்பை டி20 தள்ளிப்போனால், அந்த சமயத்தில் ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவேன். கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதிக்கும் பட்சத்தில் இந்தியா சென்று ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியும் என உறுதியாக நம்புகிறேன். கிரிக்கெட் விளையாடுவதை நாங்கள் எந்த அளவுக்கு விரும்புகிறோம் என்பதை அனைவரும் அறிவர்.

உலக கோப்பையை நடத்துவதில் ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். பங்கேற்கும் அணிகளுக்கான போக்குவரத்து, தங்கும் வசதி, 14 நாள் தனிமைப்படுத்துதல் உட்பட மருத்துவ ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று செய்ய வேண்டிய ஏற்பாடுகள் நிறைய உள்ளன. கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் இருக்க ஆஸி. அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றாலும், இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உலக கோப்பையை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனால், ஆஸி. வீரர்கள் ஐபிஎல் தொடரில் களமிறங்கத் தயாராகவே உள்ளனர். அதே சமயம் அரசின் அனுமதி கிடைப்பது மற்றும் பயண ஏற்பாடுகள் பூர்த்தியானால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆண்டு இறுதியில் இந்தியாவுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றால் அதில் அத்தனை சுவாரசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். விராத் கோஹ்லியை வெறுப்பேற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் அத்தனை சாதாரண வீரரும் அல்ல. புலியை சீண்டினால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வாறு வார்னர் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகக் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.Tags : World Cup ,IPL ,David Warner , David Warner, promises,play , IPL
× RELATED டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு: ஐசிசி அறிவிப்பு