×

4 நாட்களில் 46 பேர் பாதிப்பு; குமரியில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்: ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படுமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, பீதியை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் ஏப்ரல் 14 ம் தேதி அன்று வெறும் 16 பேர் என இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 2 மாதங்களில் 200 ஐ தாண்டி உள்ளது. நாள் தோறும் சுமார் 1500 பேருக்கு மேல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி 21 பேரும், 18ம் தேதி 7 பேரும், 19ம் தேதி 12 பேரும் என 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (20ம்தேதி) 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 நாட்களில் 46 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு 209 ஆகும். குமரி மருத்துவக்கல்லூரியில் 79 பேர் சிகிச்சையில் இருந்தனர். இவர்களில் 40 பேர் பெண்கள் ஆவர். ஏற்கனவே டிஸ்சார்ஜ் ஆன 3 பேர், அவர்களின் குடும்பத்தினர் சிகிச்சையில் உள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ளனர்.  குமரி மாவட்டம் தூத்தூரில் தற்போது சமூக பரவல் என்ற நிலையை கொரோனா எட்டி உள்ளது. அங்கு ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த இளம்பெண்ணின் உறவினர்கள் 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பங்கு தந்தை ஒருவரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்.

இதனால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வால், மக்கள் சர்வ சாதாரணமாக உலா வருகிறார்கள். கடை வீதிகளில் கூட்டம் உள்ளது. சில அரசு அலுவலகங்கள்,  மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இங்கு சமூக விலகல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் மட்டும் நேற்று 2 ஆயிரம் பேர் வரை திரண்டனர்.

இவ்வாறு சமூக விலகல் காற்றில் பறப்பது பாதிப்பை அதிகரிக்கும். அரசு பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. அங்கும் கட்டுப்பாடுகள் இல்லை. மற்ற மாவட்ட கலெக்டர்கள் போக்குவரத்து கழகத்தை எச்சரித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக இருந்தால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். சமூக விலகலை கடைபிடித்து பயணிகள் செல்ல வேண்டும் என கூறி உள்ளனர். ஆனால் குமரி மாவட்டத்தில் வருமானத்துக்கு ஆசைப்பட்டு கொரோனாவை பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் அதிக பயணிகளை ஏற்றி செல்ல வற்புறுத்துவதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள். எனவே இதுவும் பாதிப்பை அதிகப்படுத்தும்.

எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், விரைவில் சென்னையை போன்ற மிகப்பெரிய ஆபத்தை குமரி மாவட்டம் சந்திக்கும் நிலை வரலாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.               



Tags : Kumari , Kumari, corona infection, curfew
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...