×

பரிசோதனையில் நெகட்டிவ்...! சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை என பொது சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் வந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு படுதீவிரமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நாள்தோறும் 2,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என்கிறது தமிழக அரசு.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் இதுபற்றி அவருடைய உதவியாளர் ராஜாராமன் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது;  கடந்த சில தினங்களாக வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்ததினால் சென்னையிலேயே அமைச்சர் சி.வி. சண்முகம் இருந்துவந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது திண்டிவனம் இல்லத்திற்கு திரும்பிய அமைச்சர், ஓய்வு எடுத்து வந்தார். பின்னர், மீண்டும் உடல் பரிசோதனைக்காக சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார். இச்சூழலில் திட்டமிட்டு, அமைச்சருடைய உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை சிலர் பரப்பி வருவது முற்றிலும் தவறானது என அவர் தெரிவித்தார். இதனை மறுக்கும் வகையில் தமிழக அரசு அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை முடிவை வெளியிட்டுள்ளது. அதில் இருவருக்குமே கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags : Shanmugam ,CV ,Health Department , Minister for Examination and Law, CV Shanmugam, Corona, Health Department
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...