×

புத்தகங்களை எடுக்கக் கூட வசதியில்லை 3 மாதங்களாக மூடிக்கிடக்கும் 4,800 நூலகங்கள்: வாசகர்கள், போட்டித்தேர்வு எழுதுவோர் திண்டாட்டம்

நெல்லை: தமிழகம் முழுவதும் மூன்று மாத காலமாக நூலகங்கள் மூடிக் கிடப்பதால், புத்தகங்களை எடுக்க முடியாமல் வாசகர்கள் திண்டாடி வருகின்றனர். சமூக இடைவெளி அடிப்படையில் பெரிய நிறுவனங்கள் கூட திறந்து செயல்படும் சூழலில், நூலகங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘அறிவு திருக்கோயில்கள்’ என அழைக்கப்படும் நூலகங்கள் தமிழகங்களில் மாவட்டங்கள் தோறும் கிளை பரப்பி பரந்து விரிந்து காணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் சுமார் 4800 நூலகங்கள் உள்ளன. மாவட்ட தலைநகரங்களில் ஒரு மாவட்ட மைய நூலகமும், அதன் கீழ் முழு நேர நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்புற நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன.  கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் நூலகங்கள் அனைத்தும் ஊரடங்குக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த மார்ச் 23ம் தேதி பூட்டப்பட்டன. பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வந்தும், நூலகங்கள் மட்டும் பூட்டியே கிடக்கின்றன. நூலகத்துறை மாநில அளவில் நூலகங்கள் திறப்பது குறித்தோ, அதில் தளர்வுகள் கொண்டு வருவதோ குறித்தோ இன்னமும் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

நூலகங்கள் 3 மாதங்களாக பூட்டிக் கிடப்பதால், வாசகர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நூலகங்கள் முந்தைய காலங்கள் போன்று வெறும் புத்தகங்களை எடுக்கவும், மீண்டும் ஒப்படைப்பதை மட்டுமே செயல்பாடாக கொண்டிருப்பதில்லை. போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தனி அரங்கு, அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்கவும், குறிப்பெடுக்கவும் ஏராளமான வசதிகள் உள்ளன. மேலும் மாதிரி போட்டித்தேர்வுகள், குழு விவாதம், பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி வாசிப்பு முறை என பல்வேறு கட்டங்களை மைய நூலகங்கள் முன்னெடுக்கின்றன. நூலகங்கள் மூடப்பட்டதால், போட்டித்தேர்வுகள் எழுதுவோர் தற்போது குறைந்தபட்சம் தேவையான புத்தகங்களை எடுத்து செல்லக்கூட வாய்ப்பின்றி திண்டாடுகின்றனர். செய்தித்தாள்கள் வாசித்தல், வார, மாத புத்தகங்களை படிக்க தினமும் குறைந்த பட்சம் 100 வாசகர்களாவது வருவர். பெண்கள், குழந்தைகள், முதியோர் என புத்தகங்களை எடுக்கவும், திரும்ப ஒப்படைக்கவும் பெருங்கூட்டம், நாள்தோறும் நூலகத்திற்கு வருவதுண்டு. ஊரடங்கு காரணமாக நூலக பணிகள் அனைத்தும் இப்போது முடங்கி கிடக்கின்றன.

தமிழகத்தில் எத்தனையோ நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் சமூக இடைவெளியோடு செயல்பட விதிவிலக்கு அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நூலகங்களுக்கு மட்டும் இன்று வரை எவ்வித தளர்வும் கொண்டு வரப்படவில்லை. குறிப்பாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 50 வாசகர்கள் மட்டும், சமூக இடைவெளியோடு நூலகம் சென்று வர வசதிகளையாவது அரசு ஏற்படுத்தி கொடுக்கலாம். நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் மட்டுமே 48 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 41 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.  பெரும்பாலான வாசகர்கள் ஊரடங்கு கால கட்டங்களில் தங்களுக்கு படிக்க சில புத்தகங்களாவது கிடைக்குமா என்கிற ஆவலில் உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் 3 மாதங்களாக விடுமுறையில் இருக்கும் சூழலில், விடுமுறை நேரத்தில் படிக்க ஏதாவது கதை புத்தகங்களாவது கிடைக்குமா என்கிற ஏக்கத்தில் உள்ளனர். ஆனால் மாதக்கணக்கில் நூலகங்கள் பூட்டிக் கிடப்பது அவர்களை திண்டாட வைக்கிறது. எனவே தமிழக அரசு சமூக இடைவெளி அம்சங்களை பின்பற்றி, குறைந்தபட்சம் புத்தகங்களை மட்டுமாவது வாசகர்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.



Tags : libraries ,contest writers , 4,800 libraries , closed , 3 month,readers, contest writers
× RELATED பொது நூலகத்துறையில் நூல் கொள்முதல் செய்ய இணைய தளம் தொடக்கம்