×

கோடைக்காலத்தில் தாகம் தணிக்க ஊருக்குள் நுழையும் வன விலங்குகளை வேட்டையாடுவது அதிகரிப்பு: நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரியும் கும்பல்

வேலூர்: கோடைக்காலத்தில் தாகம் தணிக்க ஊருக்குள் நுழையும் வன விலங்குகளை, நாட்டு துப்பாக்கியுடன் திரியும் கும்பல் வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சுற்றிலும் மலைகள் அமைந்துள்ளன. இந்த மலைகளில் மான்கள், முயல், காட்டுப்பன்றி, புனுகுபூனை உட்பட ஏராளமான விலங்குகள் இருக்கின்றன. இதல் குடியாத்தம், பேரணாம்பட்டு உட்பட திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் வனவிலங்குகள் ஏராளமாக வாழ்கின்றன. அடிக்கடி சிறுத்தை புலி, யானைகள் நடமாட்டமும் இருக்கிறது. இந்நிலையில் வன விலங்குகள் அதிகளவில் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதாக வன ஆர்வலர்கள் வேதனையடைந்து உள்ளனர். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் தண்ணீருக்காக ஊருக்குள் வனவிலங்குகள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் வன விலங்குகள் வேட்டை அதிகரிக்கும். எனவே, விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், ‘வனப்பகுதிகளில் நாட்டுத்துப்பாக்கிகளுடன் சுற்றித்திரியும் கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது கோடைக்காலமாக உள்ளதால், தண்ணீருக்காக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் மான் உள்ளிட்ட விலங்குகள் நுழைந்துவிடுகிறது. அதேபோல் விவசாய நிலங்களுக்குள் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் நுழைகிறது. இதை சாதமாக பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடுகின்றனர். ஒரு சிலர் விவசாய நிலங்களில் சட்டத்துக்கு விரோதமாக மின்வேலி அமைத்துவிடுகின்றனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தத்தில் விவசாய நிலத்துக்கு அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை பலியானது. இதுபோன்ற சம்பவங்களால் வனவிலங்குகள் எண்ணிக்கை குறைந்து, சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படும். மேலும் குறிப்பிட்ட வனவிலங்குகள் அழியவும் வாய்ப்புள்ளது. எனவே வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேபோல் துப்பாக்கி புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றனர்.

களைகட்டும் சாராயம் விற்பனை
ஊரடங்கு உத்தரவால் மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வாறு சாராயம் காய்ச்சும் கும்பல் வனப்பகுதிகளில் உள்ள விலங்குகளையும் வேட்டையாடி வருகிறது. இதற்காக நாட்டுத்துப்பாக்கியுடன் மலைப்பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் சாராயம் காய்ச்சிய கும்பல் தட்டிக்கேட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. சாராய விற்பனையை தடுக்க டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் சாராய விற்பனையை முழுவதுமாக தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags : town , Hunting , wild animals , town , quench thirst during ,summer
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...