×

ஊரடங்கு தளர்ந்தும் விற்பனைக்கு வழியில்லாததால் ஓசூரில் டன் கணக்கில் தேங்கிய பூக்கள்: 2 மாதத்தில் ரூ.100 கோடி வருவாய் இழப்பு

ஓசூர்:  ஓசூரில் கடந்த 2 மாதங்களில் டன் கணக்கில் மலர்கள் தேக்கமடைந்ததால் விவசாயிகளுக்கு ₹100 கோடி வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் பேரிகை, பாகலூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் திறந்த வெளி மற்றும் பசுமைக்குடில்களில் சமார் 500 ஏக்கரில் கொய்மலர் சாகுபடி செய்யப்படுகிறது. ரோஜா, கார்னேஷன், ஜர்பரா, பிங்க் உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வளைகுடா நாடுகள் மற்றும் வெளி மாநில மார்க்கெட்டிற்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி முற்றிலும் சரிந்த நிலையில், உள்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் விற்பனை அடியோடு சரிந்துள்ளது. மேலும், செடியிலேயே வாடி பூக்கள் வீணாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனால், கடந்த 2 மாதங்களில் ₹100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஓசூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கார்னேசன் வகை மலர்கள் உற்பத்திக்கு கூடுதல் செலவாகிறது. கார்னேசன் செடிகள், ரோஜா செடிகளை காட்டிலும் வலுவற்றதாக இருப்பதால் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு இடையிலும் இரும்பிலான வலை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இவை பசுமை குடில்களில் மட்டுமே நன்கு வளரும். ஒரு ஏக்கரில் பசுமை குடில்கள் அமைக்க ₹35 லட்சம் வரையிலும் செலவாகிறது. கார்னேசன் மலர்கள் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம் மற்றும் ஊதா என 6 வண்ணங்களில் பயிரிடப்படுகிறது. கார்னேசன் பூவிற்கு நல்ல வரவேற்புள்ளதால், சீசன் காலங்களில் மார்க்கெட்டில் ஒரு பூ ₹15 முதல் ₹20 வரை விற்பனையாகும்.

ஊரடங்கால் சுப நிகழ்ச்சிகள், அண்டை மாநில ஏற்றுமதி முழுமையாக தடைப்பட்டதால், பூக்களை விற்பனைக்கு அனுப்ப வழியில்லாமல் தோட்டங்களிலேயே வீணாகியது. இதனால், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் மலர்கள் தேக்கமடைந்து ₹100 கோடி வரையிலும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளள்ளது. எனவே, மலர் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய- மாநில அரசுகள் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்து, கடனுதவி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Hundreds ,Hosur , Tons, Hosur as curfew ,sale,revenue loss , Rs 100 crore in 2 months
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...