×

ஊருக்குள் புகுந்து வாகனங்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம்

கூடலூர்: கூடலூரை அடுத்த செம்பாலா, ஈட்டிமூலா,ஆனை செத்த கொல்லி, முதல் மைல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் வந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் சாலை ஓரம் நிறுத்தப்ட்டிருந்த ஒரு ஆட்டோ இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றது. நள்ளிரவில் வந்த யானை  அதிகாலை வரை சாலையில் நடமாடி திரிந்துள்ளது.  இதே போல் தோட்டமூலா, ஏழுமுறம் பகுதிகளில் கடந்த பல மாத காலமாக சுற்றித் திரியும் ஒற்றை யானையும் நேற்று முன்தினம் இரவு தோட்ட மூலா பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வாழை மற்றும் தென்னைகளை உடைத்து சாப்பிட்டு சென்றுள்ளது.இப்பகுதிகளில் ஆய்வு செய்த வனத்துறையினர், தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் மேக மூட்டம் காரணமாக அதிகாலை நேரங்களில்  வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் அந்த நேரங்களில் நடைபயிற்சி செய்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது என்றும், வேலை தொடர்பாக வெளியில் வருபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான  சேரம்பாடி கோரஞ்சால், அய்யன்கொல்லி, அத்திக்குன்னு, சேலக்குன்னு, அத்திமாநகர், தேவாலா வாளவயல்,  கொளப்பள்ளி குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் குறிஞ்சி நகர்பகுதிக்குள் நுழைந்தது இரவு முழுதும் பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டின் கூரையை உடைத்து சேதம் செய்தது. வீட்டில் இருந்த அவரது மனைவி தவமணி மற்றும் இரண்டு குழந்தைகள் பயத்தில் சத்தமிட்டுள்ளனர். அதன்பின் அப்பகுதி மக்கள் காட்டு யானையை சத்தமிட்டு விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து நகரவில்லை. தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுயானைகளை வனத்திற்குள் விரட்டினர். யானைகள் சேதம் செய்த வீட்டிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Wild elephant, attacking vehicles, damaging vehicles
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...